

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பகல் பத்து உற்சவம் நடந்தது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு 12 ஆழ்வார்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவர் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
இதைத் தொடர்ந்து, மாலை 4 மணி முதல் உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு முகக்கவசம் அணிந்திருந்த பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசித்து சென்றனர். பகல் பத்து உற்சவம் வரும் 24-ம் தேதி வரை நடக்க உள்ளது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு, வரும் 25-ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அன்று காலை 6 மணிக்கு மேல், கரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இதையடுத்து, இராப்பத்து உற்சவம் தொடங்கி ஜனவரி 3-ம் தேதியுடன் திருவிழா நிறைவடைய உள்ளது.