

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3 அணைகள், 183 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், வரும் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயலின் தாக்கத்தால் பரவலான கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக கவுன்டன்யா, பொன்னை, அகரம் ஆறு உள்ளிட்ட நீர்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர் நீர்வரத்தால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியதால் புயல் மழையால் கிடைத்த உபரி நீர் முழுவதும் பாலாற்றில் கலந்தது. ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு கால்வாய் வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டது. அதேபோல், பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான காவேரிப் பாக்கம் மற்றும் அதை நம்பியுள்ள 40 ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக ஆறுகளில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப் பாட்டில் உள்ள 183 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 99 முதல் 90 சதவீதம் அளவுக்கு 5 ஏரி களும், 90 முதல் 50 சதவீதம் வரை 133 ஏரிகளும் நிரம்பியுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. இதில், 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 99 முதல் 91 சதவீதம் வரை 2 ஏரிகள், 90 முதல் 81 சதவீதம் வரை 3 ஏரிகள், 70 முதல் 51 சதவீதம் வரை 8 ஏரிகள், 50 முதல் 26 சதவீதம் வரை 12 ஏரிகள், 34 சதவீதத்துக்கு உள்ளாக 25 ஏரிகளும் நீர் வரத்து உள்ளது. 4 ஏரிகளில் நீர்வரத்து முழுமையாக இல்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் 49 ஏரிகள் உள்ளன. இதில், 8 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 80 முதல் 71 சதவீதம் வரை ஒரு ஏரியும், 70 முதல் 51 சதவீதம் வரை 2 ஏரிகள், 50 முதல் 26 சதவீதம் வரை 9 ஏரிகள், 25 சதவீதத்துக்கு உள்ளாக 6 ஏரிகள் நீர்வரத்து உள்ளன. 23 ஏரிகளில் நீர்வரத்து முழுமையாக இல்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப் பாட்டில் 369 ஏரிகள் உள்ளன. இதில், 137 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
99 முதல் 91 சதவீதம் வரை 3 ஏரிகள், 90 முதல் 81 சதவீதம் வரை 20 ஏரிகள், 80 முதல் 71 சதவீதம் வரை 31 ஏரிகள், 70 முதல் 51 சதவீதம் வரை 68 ஏரிகள், 50 முதல் 26 சதவீதம் வரை 93 ஏரிகள், 25 சதவீதத்துக்கும் குறைவாக 17 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது.