

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நள்ளிரவில் இயக்கப்பட்டு வந்த ஒரு பஸ்சும் நிறுத்தப்பட்டதால் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே சூராணத்தை சுற்றி இலந்தக்கரை, கோடிக்கரை, கூத்தக்குடி, தவளிமண்டபம், வேளாங்குளம், சாத்திசேரி, மகரந்தை, கீராம்புளி, சிங்கனி, பாலையேந்தல், விளாங்காட்டூர், தோண்டியூர், வடக்கு மாரந்தை உட்பட 25 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் இருந்து சூராணத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த சாலையில் உள்ள நாட்டார்கால் ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் பஸ் நிறுத்தப்பட்டது.
அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, 2013-14-ம் ஆண்டு ரூ.ஒரு கோடிக்கு இரண்டு பாலங்கள் கட்டப்பட்டன. பாலம் திறக்கப்பட்ட போதிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு கொடுத்ததை மதுரையில் இருந்து சூராணத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ் இரவு 9:00 மணிக்கும், அதிகாலை 5:00 மணிக்கும் சென்று வந்தது.
மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் காலை, மாலை நேரங்களில் பஸ் இயக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இரவில் இயங்கி வந்த அந்த பஸ்சும் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.
தற்போது பல இடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் மதுரையில் இருந்து சூராணத்திற்கு பஸ் இயக்கப்படவில்லை. ஒன்பது மாதங்களுக்கு மேலாக பஸ் வசதி இல்லாததால் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்.
அரசுப் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கிராமங்களுக்கு படிப்படியாக பஸ்களை இயக்கி வருகிறோம்,’ என்று கூறினார்.