

தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 7 பஞ்சாயத்து தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரினர். போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் முத்தலக்குறிச்சி, மருதூர்குறிச்சி, திக்கணங்கோடு, ஆத்திவிளை, கல்குறிச்சி, சடையமங்கலம், நுள்ளிவிளை ஆகிய கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.
இங்கு சாலை வசதி, கழிவுநீர் ஓடை சீரமைப்பு, குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என 7 பஞ்சாயத்து தலைவர்களும் தொடர் குற்றச்சாட்டு விடுத்து வந்தனர். தக்கலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விசித்ரா பஞ்சாயத்து வளர்ச்சி, மற்றும் திட்ட பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை.
மக்கள் பிரச்சினைகள் குறித்து பஞ்சாயத்து தலைவர்களின் கருத்துக்களை கேட்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுவதால் வட்டார வளர்ச்சி அலுவலரை மாற்ற வேண்டும் என குற்றச்சாட்டு விடுத்து ஏற்கனவே மூன்று முறை ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று கோழிப்போர்விளையில் உள்ள தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தக்கலை ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சிம்சன் தலைமையில் பஞ்சாயத்து தலைவர்கள் ராஜன், செல்வராணி, மரிய அகஷ்டினாள், விஜிலாசெல்வி, மரிய பால்ராஜ், அருள்ராஜ் ஆகியோர் திரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் விசித்ராவை இடமாற்றம் செய்ய«வ்டும் என கோரிக்கை விடுத்து உள்ளிருட்பு போராட்டத்திற்கு முயன்றனர்.
அப்போது அங்கு முன்னெச்செரிக்கையாக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் 7 பஞ்சாயத்து தலைவர்களையும் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பஞ்சாயத்து தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எதிராக கோஷமிட்டனர். தடையை மீறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பஞ்சாயத்து தலைவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.