

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் ரயில்களை இயக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினை, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தற்போது கரோனா தொற்றுநோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளதால் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. தமிழக அரசு அனுமதி வழங்கியும் ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயில்களை முழுமையாக இயக்க முன்வரவில்லை.
எனவே மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சாதாரண கட்டண பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையிலிருந்து விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை சாதாரண கட்டண ரயில் இயக்க வேண்டும்.
அதேபோல், மதுரை-திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம்-பழனி -உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வழியாக கோயமுத்தூருக்கு சாதாரண கட்டண பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.
மதுரை-புனலூர் வழித்தடத்தில் இயங்கும் சாதாரணக் கட்டண ரயில் விரைவு கட்டண ரயிலாக மாற்றப்பட்டதோடு, சாத்தூர், கோவில்பட்டியில் நிறுத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் தொழிலாளர்கள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மீண்டும் சாத்தூர், கோவில்பட்டியில் நிறுத்தம் ஏற்படுத்தி சாதாரண கட்டணமாக மாற்ற வேண்டும்.
தற்போது இயக்கப்படும் விழாக்கால சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்கவேண்டும்.
கரோனாவிற்கு முன்பிருந்ததுபோல் மகளிர் மட்டும் பயணிக்க பெட்டிவசதியும், ஏற்படுத்த வேண்டும்.மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை வழங்கவேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
மனுவை பெற்ற கோட்ட மேலாளர் லெனின் கூறுகையில், புனலூர் விரைவு ரயில் கோவில்பட்டியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். மதுரை- போடி ரயில் பாதை பணிகள் 4 மாதங்களில் முடிவுபெற்றபின் ரயில்கள் இயக்கப்படும். மதுரை மார்க்கத்திலிருந்து புறப்படும் பிற ரயில்களை மத்திய அரசின் ஒப்புதலைப்பெற்று விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்