மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் ஒத்துழைப்போம்: கமல்ஹாசன் பேட்டி

மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் ஒத்துழைப்போம்: கமல்ஹாசன் பேட்டி
Updated on
2 min read

மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் ஒத்துழைப்போம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன் தினம் மதுரையில் பிரச்சாரத்தைத் துவக்கிய கமல்ஹாசன், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் தூத்துக்குடி வந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் என்னை அதிமுக கட்சியின் நீட்சி என்று சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகர் வேண்டுமென்றாலும் இருக்கலாம். அவர் திமுகவில் இருந்தபோது அவரது பெயர் மக்கள் திலகம் தான். அதிமுக தொடங்கிய பின்னரும் அவரை அப்படியே தான் அழைத்தனர். இங்குள்ள 7.5 கோடி மக்களுக்கு அவர் சொந்தம். அதில் நானும் ஒருவன் என்ற அர்த்தத்திலேயே சொன்னேன்.

தேர்தல் ஆணையம் கட்சிக்குத் தேவையானவற்றை செய்வதற்காக தான் உள்ளது. அவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்பவார்கள். ஆனால், யார் குறுக்கே ஆட்களை ஏவிவிடுகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. எல்லாமே சட்டப்படி நடக்கிறது என்பதை நம்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். அது அவ்வாறாகவே இருக்க வேண்டும் என்பதே ஆசை.

எனது சுற்றுப்பயணத்துக்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்து, பின்னர் மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் புறப்பட்டு வரும்போது அனுமதி வாங்காமல் வரமாட்டோம். நாங்கள் புறப்படுவதற்கு முதல் நாள் இரவு, அனுமதி மறுப்பை வாங்க மறுத்த எங்களது தொண்டர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். எங்களுக்கு முதலில் அனுமதி கொடுத்தது ஏன்? பின்னர் மறுத்தது ஏன்? தெரியாமல் கொடுத்தார்களா?

குற்றம் செய்தவர்கள் தான் மக்களைப் பார்த்து அச்சப்பட வேண்டும். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள். எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது.

அதனால் தான் தேடிச் சென்று பார்க்கிறோம். உச்சிவெயிலில், உணவு வேளையில், அவர்கள் மண்டை பிளக்கும் வெயிலில் காத்திருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்வது எங்களது கடமை.

நாங்கள் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருக்கிறோம். வெறும் பண பலம், படிப்பு மட்டும் இருந்தால் போதாது. மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் வருவதில் அர்த்தமில்லை. எல்லாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நமக்கு தான் புத்திகூர்மை இருக்க வேண்டும்.

புதிதாக வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகின்றனர். நான் ஏன் வந்தேன் என்பதற்காக காரணத்தை சொல்லிவிட்டேன். கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதனை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்களது கொள்கை என்னவென்பதை இன்னும் தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதை நாம் முழுக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினி தெளிவாகச் சொல்லட்டும். பின்னர் நாங்கள் பேசுவோம். நட்பு என்பது எங்களுக்கு எளிதான ஒன்று. நாங்கள் இருவருமே ஒரு போன் போட்டால் கிடைக்கக் கூடியவர்கள் தான். கொள்கை வழியில் ஒத்து வந்தது என்றால், ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் ஈகோவை விட்டுக் கொடுத்துவிட்டு ஒத்துழைப்போம் என ஏற்கெனவே கூறியது தான்.

நான் காந்தியாருக்கு மட்டுமே பி டீம்மாக இருப்பேன். வேறு யாருக்கும் பி டீம் கிடையாது. ஏ டீம்மாக ஆவதற்காக தயார் செய்து கொண்டு வந்தவர்கள். ஒத்திகை பார்த்து பயிற்சி எடுத்து வந்தவர்கள். அவர்கள் இந்த ஏ,பி,சி,டியை புதிதாக கற்றுக்கொண்டுள்ளனர். ஊழல் மேளங்கள் முழங்கி கொண்டிருக்கும்போது, நியாயம் பேசினால் அவர்களுக்கு கேட்காது. அந்த மேளத்தை நிறுத்தினால் நாம் என்ன சொல்கிறோம் என்பது அவர்களுக்கு புரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in