Published : 15 Dec 2020 05:53 PM
Last Updated : 15 Dec 2020 05:53 PM

மினி கிளினிக் சீர்திருத்தங்கள் தொடர்பாக 10 கோரிக்கைகள்; அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

மினி கிளினிக்குகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

சென்னை

மினி கிளினிக் சீர்திருத்தங்கள் தொடர்பான 10 கோரிக்கைகளை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் இன்று (டிச. 15) சுகாதாரத் துறைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தின் நகலை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் ஆகியோருக்கும் சமர்ப்பித்துள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பை மேம்படுத்த 2,000 மினி கிளினிக்குகள் சுகாதார வசதி மேம்படாத கிராமங்களில் 3 கி.மீ. தொலைவில் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது (G.O.M.S.530) வரவேற்கத்தக்கது. என்றாலும், Dep.Health and Family Welfare 05.12.2020 இதே நடைமுறையில் துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் Health and Wellness Centre-கள் என்று ஏற்கெனவே ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மினி கிளினுக்குகளுக்கென 2,000 புதிய மருத்துவர்கள் எம்.ஆர்.பி (MRB) மூலம் நியமிக்கப்படுவார்கள் என்றும், 2,000 ஒப்பந்தச் செவிலியர்கள் மற்றும் 2,000 மருத்துவமனைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

ஆனால், 04.12.2020 அன்று பொது சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி மினி கிளினிக்குகளுக்கென புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் ஏற்கெனவே துறையில் பள்ளி சிறார் நலத்திட்டத்திற்காகப் பணிபுரிந்து வரும் ஆர்.பி.எஸ்.கே (RBSK) மருத்துவர்கள், நடமாடும் மருத்துவக் குழு உள்ளிட்ட மருத்துவக் குழுக்களையும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு மருத்துவர்களில் ஒருவரை மாற்றுப் பணியில் பணிபுரிய வைப்பதும், செவிலியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய வைப்பது என்றும் ஏற்கெனவே உள்ள மருத்துவமனைப் பணியாளர்களை வைத்து, திட்டத்தை 15.12.2020 அன்று தொடங்குங்கள் என்று அறிவித்தது.

மினி கிளினிக்குகளுக்கு அனுப்பப்படும் மருத்துவர் காலை 8 மணியிலிருந்து மாலை 7 மணி வரை பணிபுரிய வேண்டும் என்ற பணி நேரங்கள் வரன்முறைக்கு எதிரான உடனடி அறிவிப்பை இச்சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

ஆண்கள், பெண்கள் என மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் காலை 8 மணிக்குப் பணிகளைத் தொடங்கி இரவு 8 மணி வரை சுமார் 16 மணி நேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

கீழ்க்கண்ட கோரிக்கைகளை மினி கிளினிக் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (TNMOA) முன் வைக்கிறது:

1. அரசு அறிவித்தபடி 2,000 மினி கிளினிக்குகளுக்கென 2,000 புதிய மருத்துவர்களையும், 2,000 செவிலியர்களையும், மருத்துவமனைப் பணியாளர்களையும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (MRB) மூலம் உடனடியாக நியமிக்க வேண்டும்.

2. 2018 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள மருத்துவர்களைக் கலந்தாய்வு மூலம் உரிய வழிமுறையாக, மினி கிளினிக்குகள் நலன் கருதி நியமிக்க வேண்டும். உண்மையாக சேவை செய்யக் காத்திருப்போருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

3. மினி கிளினிக் செயல்படும் பணி நேரத்தை மறுசீராய்வு செய்து வழக்கமான பணி நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும். மாலை 4 மணி முதல் இரவு 8 வரை என்ற அறிவிப்பை மாற்றி உத்தரவிட வேண்டும்.

4. ஏற்கெனவே பல இடங்களில் மருத்துவர்கள் வாகன வசதி ஏதுமின்றி களப்பணிகளில் தடுமாறி வரும் சூழலில், மினி கிளினிக் மருத்துவர்களுக்கு வாகன வசதி முறையாக செய்து தரப்பட வேண்டும் அல்லது உரிய பயணப்படி அளித்திட வேண்டும்.

5. அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வார ஓய்வு என்று காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கத்தை மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற அறிவிப்பு பணியாளர் உரிமைகளுக்கு எதிரானதாக அமையும். ஆகவே, ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி உத்தரவிட வேண்டும்.

6. ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் எம்.எம்.யூ (MMU) நடமாடும் மருத்துவக் குழு, பள்ளி சிறார் நலத்திட்டம் (RBSK) உள்ளிட்ட திட்டங்களில் தொய்வு ஏற்படும் என்பதையும். முறையாகச் செயல்படுத்த முடியாது என்பதையும் உணர்ந்து சம்பந்தப்பட்ட ஆர்.பி.எஸ்.கே (RBSK), எம்.எம்.யூ (MMU) மருத்துவர்களை மாற்றுப் பணியில் நியமிப்பதை நிறுத்தி புதிய பிரத்யேக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இல்லையென்றால், மினி கிளினிக்குகள் உள்ளிட்ட திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியுமா என்ற ஐயப்பாடு நிலவுவதை இச்சங்கம் சுட்டிக்காட்டி அன்றாட மருத்துவப் பணிகள் தடைப்படாத வண்ணம் மாற்று வழியில் மினி கிளினிக்குகள் திட்டத்தை மறுசீரமைக்கக் கோரிக்கை விடுக்கிறது.

7. அடிப்படை வசதிகளான கழிப்பறை, தரமான கட்டிடம் உள்ளிட்ட மிக முக்கியக் காரணிகளை இருபால் மருத்துவப் பணியாளர்களுக்கும் உறுதி செய்திட வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறது. துணை சுகாதார நிலையங்கள் இத்தகைய வசதிகளை பெற்றிருக்கிறதா எனவும், அப்படி இல்லாமல் இருக்கையில் கிராம பஞ்சாயத்துக் கட்டிடங்களில் மினி கிளினிக்குகள் தேர்வு செய்யப்படுவது என்பது வழக்கமாக காய்ச்சல் முகாம் நடத்துவது போன்ற தோற்றத்தைத் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உட்கட்டமைப்பு வசதிகளையும், பணிப் பாதுகாப்பு வசதிகளையும் உறுதிப்படுத்த இச்சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

8. ஏற்கெனவே பல்வேறு பேரிடர் காலங்கள் சமீபத்திய கரோனா பேரிடர், புயல், மழை, வெள்ளக் காலங்களிலும், காய்ச்சல் தடுப்பிலும், பொது சுகாதாரத்துறையில் ஆர்.பி.எஸ்.கே (RBSK), எம்.எம்.யூ (MMU) மற்றும் அனைத்து பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மக்களைக் கேடயம் போல் பாதுகாத்துச் சிறப்பான பணி செய்து வருவதால், அத்தகைய மருத்துவர்களுக்குக் காலமுறை ஊதியம் மற்றும் துறை ரீதியான பதவி உயர்வு, உரிய படிகள் முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீட்டுக்கான சிறப்பு சட்ட மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென இச்சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

9. மினி கிளினிக்குகள் வழக்கமான பணி நேரங்களைவிட இரவு நேரங்களிலும் தொடர்ந்தால் என்.பி.ஏ (NPA - Non Practicing Allowances) 25% பொது சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு வழங்கிட இச்சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

10. மினி கிளினிக்குகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உரிய சீர்திருத்தங்களுடன் மாற்றி உத்தரவிடுமாறு இச்சங்கம் கோரிக்கை விடுக்கிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x