Published : 15 Dec 2020 05:38 PM
Last Updated : 15 Dec 2020 05:38 PM

கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணி: தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கக் கோயில் நிலம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அரசுத் தரப்பில் மேலும் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தடை தொடரும் என உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், கோயில் நிலத்தை நீண்டகாலத்துக்குக் குத்தகைக்கு விடுவது தொடர்பாகக் கடந்த நவம்பர் 28-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், அரசு முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. எத்தனை ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படுகிறது என்ற விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்துசமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நிலம் குத்தகைக்கு வழங்கப்படும்போது சட்ட நடைமுறை முழுமையாகப் பின்பற்றப்படும். பயன்பாட்டில் இல்லாத அந்த நிலத்தின் மூலம் கோயிலுக்கு மாத வாடகையாக வருமானம் கிடைக்கும். எதிர்மனுதாரர் புகார் மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது கோயில் சிதிலமடைந்துள்ளது தெரிகிறது. அதைச் சரி செய்யாதது ஏன்? எத்தனை ஆண்டுகளுக்குக் கோயில் நிலம் குத்தகைக்கு வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் மனுவுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், இந்துசமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x