கரோனாவைக் காரணம் காட்டி ஜிப்மரில் அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்; மருந்துகளை வாங்க இயலாமல் தவிப்பு: கட்டுப்பாடு தொடரும் என இயக்குனர் உறுதி

ஜிப்மர் மருத்துவமனை: கோப்புப்படம்
ஜிப்மர் மருத்துவமனை: கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனாவைச் சுட்டிக்காட்டி ஜிப்மரில் புறநோயாளிகள் தொலைபேசியில் முன்பதிவு செய்து எஸ்எம்எஸ் வந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படும் நிலை தொடர்வதால், உரிய சிகிச்சை பெற இயலாமல் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். மருந்துகளையும் வாங்க இயலாமல் தவிக்கின்றனர். ஆனால், இக்கட்டுப்பாடுகள் தொடரும் என்று இயக்குனர் ராகேஷ் அகர்வால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) செயல்பட்டு வருகிறது. இது தேசியத் தரம் வாய்ந்த மருத்துவமனை என்பதால், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவது வழக்கம்.

கரோனா ஊரடங்கால் ஜிப்மரில் ஜூலை மாதம் வரை வெளிப்புறச் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டிருந்தது. பின்னர், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வந்த நிலையில், புதுவையில் தொற்றுப் பரவல் அதிகமானது. இதையடுத்து, கடந்த ஆக.24-ம் தேதி முதல் தற்காலிகமாகப் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 28-ல் வெளிப்புறச் சிகிச்சைப் பிரிவு சேவை தொடங்கப்பட்டாலும், தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று எஸ்எம்எஸ் வந்தால் மட்டுமே ஜிப்மருக்குள் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், "தற்போது கரோனா தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தேசிய அளவில் தளர்த்தப்பட்டாலும் ஜிப்மர் அதை நடைமுறைப்படுத்தவில்லை. காலத்தோடு உரிய கிசிச்சை கிடைக்காமல் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு வந்தாலும் தொலைபேசியில் பதிவு செய்யாமல் வந்ததாகப் பலரும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

மேலும், புற்றுநோய், எய்ட்ஸ், நீரிழிவு, காசநோய், ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மருந்து வழங்கப்படுகிறது. அது தீர்ந்துவிட்டால் மீண்டும் மருந்து வாங்கத் தொலைபேசியில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு உடனே அனுமதி கிடைக்காது. தொடர்ந்து தொடர்பு கொண்டால், மருத்துவர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறிவிடுவார்கள். மருந்து பெறவே கடும் முயற்சி எடுக்கும் சூழலில் நோயாளிகள் உள்ளனர்.

தொடர்ந்து மருந்துகளை எடுக்காமல் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால், ஜிப்மர் நிர்வாகமோ கரோனா தொற்றைக் காரணம்காட்டி, கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வலியை உணராமல் தொடர்ந்து அலட்சியம் செய்கிறது. ஜிப்மர் நிர்வாகம் நோயாளிகளை அலைக்கழிக்காமல் உடனே புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

தொலைபேசி முன்பதிவு சேவை கட்டுப்பாடு தொடரும்

இதுபற்றி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்ட தகவலில், "தொலைபேசி மருத்துவ ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டே தற்போது செயல்படுகிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள் அவசியமெனில் மட்டுமே மருத்துவமனைக்கு வரவழைக்கப்படுகின்றனர்.

ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால்
ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால்

தற்போது, 3,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் கரோனா அல்லாத பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் வெளிப்புறச் சிகிச்சைகளைப் பெறுகின்றனர். மேலும், தினமும் அவசரப் பிரிவுகளில் சராசரியாக 400 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு தொலைபேசி முன்பதிவு மருத்துவ சேவை போன்ற கட்டுப்பாடுகள் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in