Last Updated : 15 Dec, 2020 04:33 PM

 

Published : 15 Dec 2020 04:33 PM
Last Updated : 15 Dec 2020 04:33 PM

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்; கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், மாவட்டம் முழுவதும் 1,440 நியாயவிலைக் கடைகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் முதல், நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்' மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

முன்பு வழக்கமாக, நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டை ஸ்கேனிங் செய்து, சில நிமிடங்களில் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், மேற்கண்ட ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், உணவுப் பொருட்கள் வழங்குவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது, பயோ-மெட்ரிக் முறையில் கார்டை ஸ்கேன் செய்து, அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைரேகை வைத்து, சரியாகப் பதிவானால் மட்டுமே, அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்த சமயத்தில், சர்வர் பழுது காரணமாக, மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் விநியோகம் தாமதமானது. ஒரு கடையில், ஒருநாளைக்குச் சராசரியாக 200 பேருக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலை மாறி, இந்த முறையால் ஒரு நாளைக்குச் சராசரியாக 60 பேருக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஸ்கேன் செய்து, கைரேகை வைத்து பொருட்கள் பெறும் பயோ-மெட்ரிக் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஸ்கேன் செய்து முன்பு போல் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேசமயம், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்காக சாப்ட்வேரை மேம்படுத்தும் பணி அரசால் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாவட்டத்தில் உள்ள 5 தாலுக்காக்களில் தலா ஒரு கடையில், சோதனை அடிப்படையில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் இன்று (டிச.15) முதல் மீண்டும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

3 நிமிடங்களில் பில்

இதுகுறித்து, கோவை மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் குமரேசன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "சாப்ட்வேர் 2-ஜியில் இருந்து 4-ஜி வேகத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சர்வர், சாப்ட்வேர் சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்' மூலம் பயோ-மெட்ரிக் முறையில் ஸ்கேன் செய்து, கைரேகை வைத்து உணவுப் பொருட்கள் வழங்கும் முறை மீண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இம்முறை மூலம் அதிகபட்சமாக ஒருவருக்கு 2 முதல் 3 நிமிடங்களில் உணவுப் பொருட்களுக்கான பில் போடப்பட்டு விடும். அடுத்த சில நிமிடங்களில் பொருட்கள் வழங்கப்பட்டு விடும். ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் மட்டுமே, அந்த அட்டையைப் பயன்படுத்திப் பொருட்கள் பெற முடியும்.

ஒருவரது ஸ்மார்ட் கார்டு அட்டையைப் பயன்படுத்தி மற்றவர்கள் பொருட்கள் பெற முடியாது. வெளி மாநிலம், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள் தங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பயன்படுத்தி, எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானலும் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x