முதல்வர் பழனிசாமி வருகை: பொலிவு பெறும் அரியலூர் நகரம் 

முதல்வரை வரவேற்க வைக்கப்பட்டுள்ள வளைவு.
முதல்வரை வரவேற்க வைக்கப்பட்டுள்ள வளைவு.
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம், முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பழனிசாமி வரும் டிச.17-ம் தேதி பங்கேற்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் அரியலூர் நகரம் புதிய பொலிவு பெற்று வருகிறது. நகரின் சாலைகளில் உள்ள சென்டர் மீடியன் சுண்ணாம்பு பூசப்பட்டு, மண் குவியல்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படுகின்றன.

அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதால், ஆட்சியர் அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.

அதேபோல், மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூரிலிருந்து அரியலூர் வரும் முதல்வரை வரவேற்கும் வகையில், மாவட்ட எல்லையான அல்லிநகரம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வரவேற்பு வளைவுகள், சாலையின் இரு புறங்களிலும் அதிமுக கட்சிக் கொடிகள் என அரியலூர் நகர் முழுவதும் பொலிவு பெற்றுள்ளது.

முதல்வரை வரவேற்றுச் சாலையின் இரு புறமும் கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சிக் கொடிகள்.
முதல்வரை வரவேற்றுச் சாலையின் இரு புறமும் கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சிக் கொடிகள்.

மேலும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர், முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்துத் துறை அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியர் அலுவலகம், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், நிகழ்ச்சியில் பங்கேற்கும் கட்சியினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் அன்று நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in