

கட்சியின் பெயர் தொடர்பாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடவுள்ளார் ரஜினி. இதனிடையே, நேற்று (டிசம்பர் 14) தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு என்ன சின்னம் என்ற அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
இதில் 'மக்கள் சேவை கட்சி' என்ற புதிய கட்சியின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதை வைத்து, இது ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் என்று கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள், செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
"இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.