Published : 15 Dec 2020 02:38 PM
Last Updated : 15 Dec 2020 02:38 PM

மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு; இடைக்காலத் தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், தனக்குத் தகுதியிருந்தும் இடம் கிடைக்கவில்லை என மாணவி ஒருவர் ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை கோரி தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்டது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இதன் மூலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி, இந்த ஆண்டு எழுதி 3-வது முயற்சியாக நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததை அடுத்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து பூஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவே அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் தனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போனது. நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூட தாண்டாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாயமற்றது.

தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை இறுதி செய்யக் கூடாது” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதால் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால்தான் மாணவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாகப் பார்க்க வேண்டுமே தவிர எதிரியாகப் பார்க்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்து விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x