Published : 26 Oct 2015 03:18 PM
Last Updated : 26 Oct 2015 03:18 PM

கட்டிட பராமரிப்பால் ஒரு வாரமாக கதிரியக்க சிகிச்சை நிறுத்தம்: அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் தவிப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் முறையான திட்டமிடுதல் இன்றி, பொதுப்பணித் துறை மேற்கொண்ட பராமரிப்பு பணிகளால் கதிரியக்க சிகிச்சை நிறுத்தப்பட்டது. இதனால், ஒரு வாரமாக புற்றுநோயாளிகள் கதிரியக்க சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ராஜாஜி மருத்துவ மனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் மருத்துவப் பிரிவு மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்று பிரிவுகள் செயல்படுகின்றன. 2013-ம் ஆண்டு புதிய மற்றும் பழைய நோயாளிகள் உட்பட மொத்தம் 15,832 பேரும், 2014-ம் ஆண்டு 16,564 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014-ம் ஆண்டில் 732 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்க கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கதிரியக்கச் சிகிச்சைக்கான கோபால்ட் தெரபி, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து, இந்த மருத்து வமனையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனுமதி பெற்று நிறுவப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனை கதிரியக்க சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பு பணி மேற்கொள்கிறது. டைல்ஸ் ஒட்டுவது, சேதமடைந்த கட்டிடச் சுவர்களை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால், கடந்த ஒரு வாரமாக புற்று நோயாளிகளுக்கு வழங்கப் படும் கதிரியக்க சிகிச்சை நிறுத்தப்பட்டது. அதனால், நோயாளிகள் தவித்து வரு கின்றனர். கதிரியக்க சிகிச்சையை நோயாளிகள் தடையின்றி எடுத்துக் கொள்ள வேண்டும். தவறினால் அறுவை சிகிச்சைக்கு பிறகும் புற்றுநோய் செல்கள் முழுமையாக அழியாமல் மேலும் பாதிப்புகளை உண்டாக்கும் வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கதிரியக்க சிகிச் சைப் பிரிவு மருத்துவர்களிடம் விசாரித்தபோது, கதிரியக்க சிகிச்சையை தொடர்ந்து பெறாமல் நிறுத்தப்பட்டால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கதிரியக்கப் பிரிவில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது கதிர்வீச் சுகள் அந்தக் கட்டிடத்தில் இருந்து ஊடுருவி வெளியே நடமாடுகிறவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதனால், இந்த சிகிச்சைப்பிரிவு கட்டிட சுவர் கதிர்வீச்சால் பாதிக்கப் படாதவாறு அதற்குரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட் டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவில் மரக்கதவுகளின் நடுவில் காரியம் தகடுகள் பதிக்கப்பட்டு, கதிர்கள் ஊடுருவாதவாறு பாதுகாக் கப்படுகிறது.

துறை சார்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பில்லா பராமரிப்புப் பணியால் இந்தக் கதவு சேதமடைந் துள்ளது. அதனால், இனி இந்த கதவுகளை புதிதாகத்தான் அமைக்க வேண்டும். புதிதாக அமைக்காவிட்டால் கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் இருந்து கதிர்கள் வெளியே ஊடுருவும் அபாயம் உள்ளது என்றனர்.

நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை

இதுகுறித்து மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்டபோது, பராமரிப்புப் பணிக்காக வேறு வழியில்லாமல் தற்காலிகமாக சில நாட்கள் மட்டுமே கதிரியக்க சிகிச்சை வழங்குவது நிறுத்தப்பட்டது. பராமரிப்புப் பணிக்காக கதிரியக்க சிகிச்சை நிறுத்தப்பட்ட நாட்களுக்கு தகுந்தபடி நோயாளிகளுக்கான சிகிச்சை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்றி அமைக்கப்பட்டது. அதனால், சிகிச்சை வழங்காமல் எந்த நோயாளியையும் திருப்பி அனுப்பவில்லை. தற்போது பராமரிப்புப் பணி நிறைவடைந் துள்ளது. சேதமடைந்த காரியம் தகடு பதிக்கப்பட்ட கதவும் பராமரிக்கப்பட்டு விட்டது. நாளை (இன்று) முதல் கதிரியக்க சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும். நோயாளிகள் தொடர் கதிரியக்க சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. வாரத்தில் 5 நாட்கள் பெற்றாலே போதும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x