Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

ஏற்கெனவே உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதால் அச்சப்பட தேவையில்லை: பொதுமக்களுக்கு மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் வேண்டுகோள்

இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மத்தியஅரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) சார்பில் ‘கரோனா தொற்று காலத்தில் சமூகஊடகங்கள் வாயிலாக அறிவியல் தகவல் தொடர்பு’ என்ற தலைப்பில் இணையவழி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதாவது:

கரோனா தடுப்பு மருந்து குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. கரோனா தடுப்பு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் இதன் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என்றெல்லாம் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

தடுப்பு மருந்தால் வேறு ஏதாவது பாதிப்பு வருமா என்று சொல்ல முடியாது. கற்பனையாக பாதிப்பு என்று சொல்வதும் தவறு. பாதிப்பே இருக்காது என்பதும் தவறு. தடுப்பு மருந்தை பயன்படுத்தி உடலில் ‘சிப்’ பொருத்தப்படும் என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் புரளி. கற்பனையான குற்றச்சாட்டு.

இந்தியாவில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும்சேர்ந்து ஆண்டுக்கு 300 கோடிடோஸ் கரோனா தடுப்பு மருந்தைஉற்பத்தி செய்ய முடியும். அதேநேரம் குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து உள்ளிட்ட இதர தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது.

இந்தியாவில் 120 கோடி தடுப்பு மருந்து போடுவதாக இருந்தால் ஒருநபருக்கு 2 டோஸ் வீதம் 240 கோடிடோஸ் தடுப்பு மருந்து அவசியம். அந்த தடுப்பு மருந்தை வைப்பதற்குகண்ணாடி குப்பிகள் தேவைப்படும்.அவற்றையும் தயாரிக்க வேண்டியுள்ளது. எப்படி போலியோ மருந்துபொதுச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளதோ (காப்புரிமை கிடையாது) அதேபோல் குறைந்தபட்சம் பெருந்தொற்று காலத்திலாவது கரோனா தடுப்பு மருந்து பொது சொத்தாக அறிவிக்கப்பட்டால் நல்லது.

தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருகிறது என்றால் அதற்கு 4 கட்ட சோதனை நடத்தப்படும். முதல் 2சோதனைகளைத் தொடர்ந்து 3-வதுகட்ட சோதனையின்போது சில ஆயிரம் பேர்களிடமும் 4-வது கட்டத்தின்போது இன்னும் கூடுதலாக 10 ஆயிரம், 20 ஆயிரம் பேர்களிடமும் பரிசோதித்துப் பார்க்கப்படும். அதன்பிறகுதான் அந்த தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்குவார்கள்.

4-வது கட்ட சோதனைக்கு சிலஆண்டுகள் பிடிக்கும். இதனால், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு 3-வது கட்ட சோதனை பயனளிக்கும் வகையில் இருந்தால் அவசர கால பயன் என்ற முறையில் யாருக்கு ஆபத்து அதிகம் என்றவகையில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு மருந்து போடுவார்கள். எனவே, 3-வது கட்ட சோதனையே 4-வது கட்ட சோதனையாக மாறிவிடும். அந்த அடிப்படையில்தான் தற்போது பணிகள் நடக்கின்றன.

தடுப்பு மருந்து தொழில்நுட்பம் என்பது கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய கரோனா தடுப்பு மருந்து தொழில்நுட்பமும். எனவே, மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை பிஐபி கூடுதல் டைரக்டர் ஜெனரல் எம்.அண்ணாதுரை வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, சென்னை பிஐபி இயக்குநர் பி.குருபாபு பலராமன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x