

யூ-டியூப்பில் அதிகமாக பார்வையிடப்படும் வீடியோக்களுக்கு இடையே விளம்பரம் ஒளிபரப்பப்படும். அந்த விளம்பரத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனலுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், மக்கள் அவ்வளவு எளிதாக வீடியோவுக்கு லைக் மற்றும்சப்ஸ்க்ரைப் செய்துவிட மாட்டார்கள். இதனால், லைக் செய்தால் அல்லது சப்ஸ்கிரைப் செய்தால் பணம் தருவதாக பல செயலிகள் வலம் வருகின்றன. மீ சேர் (me share) மற்றும் லைக் சேர் (like share) போன்ற செயலிகள் அவற்றில் முக்கியமானவை.
இந்த செயலிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு பல திட்டங்கள் உள்ளன. அப்டேட், ஆங்கர், இன்டர்னெட் செலிபிரிட்டி, ஆஸ்கர், கிங்க்என்ற பெயரில் உள்ள இந்தத் திட்டங்களில் சேர 1,000 ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டும்.
‘கிங்க்’ என்ற திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யலாம். ஒவ்வொரு லைக்குக்கும் 18 ரூபாய் சம்பாதிக்கலாம். அதன்படி, ஒரு நாளைக்கு 1,800 ரூபாயும், மாதம்54 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று செயலியில் பட்டியிலிட்டு மக்களின் ஆசையை தூண்டியுள்ளனர்.
பணத்துக்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் இந்த திட்டங்களில் சேர்ந்து பணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், திடீரென அந்த செயலிகள் அனைத்தும் செயல் இழந்து விட, பணம் கட்டியவர்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இதேபோல வசூல் செய்து பல கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைபர் கிரைம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், செயலியில் செலுத்திய பணம் அனைத்தும், பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதைவைத்து அந்த மோசடி கும்பலைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.