

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கைப்பற்றப்பட்ட புதையல் நகைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் புனரமைப்புக்காக அங்கிருந்த பழைய கோயிலை இடித்து படிகளைத் தோண்டியபோது அதில் ஒரு பெட்டி போன்ற அமைப்பில் தங்கப் புதையல் கிடைத்தது. இதை முதலில் வருவாய் துறையிடம் ஒப்படைக்க பொதுமக்கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் வித்யா தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த நகைகள் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த நகைகளில் சடை பில்லை சிறியது - 23, சடைபில்லை பெரியது - 7, ஒட்டியாணம் - 1, குண்டுமணி - 29, உடைந்த நிலையில் உள்ள ஆரம் - 5, சிவபிறை - 1, தகடுகள் - 3 ஆகியவை உள்ளிட்ட 565 கிராம் எடையுள்ள தங்க நகைகளை வருவாய் துறையினர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த நகைகளில் பலவற்றில் செப்பு கலக்காத தூய தங்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த புதையல் நகைகளை முறையான ஆய்வுக்கு உட்படுத்த வருவாய் கோட்டாட்சியர் வித்யா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவுப்படி இந்த நகைகள் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. அவர்கள் இந்த நகைகள் எத்தனை ஆண்டு பழமையானது? எந்த மன்னர் காலத்து நகைகள் என்பது தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயில் பகுதியில் மன்னர் காலத்து வேறுஏதேனும் கல்வெட்டு இருக்கின்றதா? தொல்லியல் ஆய்வுக்கு இந்த இடத்தை உட்படுத்தலாமா என்பன தொடர்பாக நடவடிக்கைகள் இந்த ஆய்வுக்குப் பின்னரே முழுமையாக தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.