

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருகல் நோயால் 120 ஏக்கரில் வெங்காயம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே செங்குளம், பறையங்குளம், முக்குடி, காஞ்சிரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகள் சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளன.
மேலும் இங்கு விளையும் வெங்காயம் மதுரை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விதை வெங்காயத்தை மதுரையில் வாங்குகின்றனர்.
வெங்காயம் 3 மாதங்களில் விளைச்சலுக்கு வந்துவிடும். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தநிலையில், வெங்காய பயிரில் திருகல் நோய் ஏற்பட்டது. மகசூல் இழப்பால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிரங்குளம் விவசாயிகள் கூறியதாவது ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 4 முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும்.
சீசனைப் பொறுத்து வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விலை கிடைக்கும். தற்போது நோய் பாதிப்பால் பலத்த மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெங்காயச் செடிகள் நேராக வளர்ந்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும். திருகல்நோய் பாதிப்பால் செடிகள் சுருண்டு விடுகின்றன. இதனால் செடியின் தாள்கள் கருகி விழுந்து விடுகின்றன.
செடிக்கு 20 வெங்காயங்கள் இருக்க வேண்டும். ஆனால் 2 வெங்காயங்கள் மட்டுமே விளைந்துள்ளது. இதனால் ஏக்கருக்கு 40 கிலோ கிடைப்பதே சிரமம் தான்.
வெங்காய விவசாயத்தை நம்பி கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.