

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் ராடு கம்பியால் தாக்கி கொள்ளையடிக்கும் கொள்ளையர்களால் சாலையோர வீடுகளில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர்.
காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவவீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகியோரை ஜூலை 14-ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் ராடு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு 75 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஐந்து மாதங்களாகியும் இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்காத நிலையில் அக்.10-ம் தேதி காலை முடுக்கூரணி அருகேயுள்ள ஆண்டிச்சியூரணியில் பன்னீர்செல்வம் என்பவர் வீட்டிற்கு கம்பியுடன் நுழைந்த 2 மர்மநபர்கள், அவரை மிரட்டி 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
அதேபோல் நவ.23-ம் தேதி காலை ஆண்டிச்சியூரணி அருகேயுள்ள புலியடித் தம்பத்தில் பன்னீர்செல்வம் என்பவரது வீட்டிற்கு ராடு கம்பியுடன் 2 மர்மநபர்கள் சென்றனர்.
அங்கிருந்த அவரது மனைவி, மகளை மிரட்டி நகைகளைப் பறிக்க முயன்றனர். அவர்கள் கூச்சலிட்டத்தால் அக்கம்,பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
தொடர்ந்து இதேபோல் சாலையோரங்களில் இருக்கும் வீடுகளுக்குச் செல்லும் கொள்ளையர்கள் ராடு கம்பியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து வருகின்றனர்.
இதுவரை காளையார்கோவில் பகுதியில் நடந்த மூன்று சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் சாலையோர வீடுகளில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர்.
போலீஸார் விரைந்து செயல்பட்டு காளையார்கோவில் பகுதியை கலக்கி வரும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.