

தஞ்சாவூரில் 70 கி.மீட்டர் தூரத்துக்குத் தனி ஆளாக டிராக்டர் ஓட்டியபடி வந்து, பெண் விவசாயி காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது பேசுபொருளாகி உள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காத்திருப்புப் போராட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று (14-ம் தேதி) நடைபெற்றது.
இதில் விவசாயிகள் அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் விவசாயிகள், கட்சியினர் வாகனங்களில் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர். மேலும், தஞ்சாவூரின் முக்கியப் பிரதான வழிகளில் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்களைத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர். இதனால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஒன்றியச் செயலாளரும், விவசாயியுமான எஸ்தர் லீமா டிராக்டரில் கட்சி, விவசாய சங்கக் கொடிகளைக் கட்டியவாறு 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தஞ்சாவூர் போராட்டக் களத்துக்கு டிராக்டரை அவரே ஓட்டியபடி வந்து கலந்துகொண்டார்.
ஆங்காங்கே காவல்துறையினர் பல்வேறு தடுப்புகளை அமைத்திருந்த நிலையிலும், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே தான் ஓட்டி வந்த டிராக்டரை நிறுத்திவிட்டு, எஸ்தர்லீமா போராட்டத்தில் கலந்து கொண்டார். நீண்ட தூரம் தனி ஆளாக டிராக்டரை ஓட்டிவந்து போராட்டத்தில் கலந்துகொண்ட எஸ்தர் லீமாவைப் பலரும் பாராட்டினர். பின்னர் அவர் தஞ்சாவூரிலிருந்து சொந்த ஊருக்கு டிராக்டர் ஓட்டியபடி சென்றார்.
இதுகுறித்து எஸ்தர் லீமா கூறும்போது, ''எங்கள் வீட்டில் உள்ள டிராக்டரை நான்தான் ஓட்டி வருகிறேன். தஞ்சாவூரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஊரிலிருந்து கிராமங்கள் வழியாகப் போலீஸார் இல்லாத பாதையாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டேன். போராட்டம் மாலை முடிந்ததும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் செல்கிறேன்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு போராட்டங்களில் நான் கலந்து கொண்டாலும் இன்றைய போராட்டம் என்பது என்னால் மறக்கமுடியாத நிகழ்வாக மாறியுள்ளது'' என்றார்.