

சிவகங்கை மாவட்டம் சருகணி அருகே தொடர் மழையால் 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பால் பிடிக்காமல் பதராகி போகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சருகணி அருகே முப்பையூர், புளியால், கற்களத்தூர், திருவேகம்பத்தூர், திடக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் நெற்பயிர்களில் உருவாகிய நெல்மணிகளில் பால்பிடிக்கும் பருவத்தில் அப்பகுதியில் புரெவி புயலால் தொடர்ந்து மழை பெய்தது.
இதில் 100 ஏக்கருக்கு மேல் நெல்மணிகளில் பால் பிடிக்காமல் பதராகி போனது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட முப்பையூர் விவசாயிகள் நிவாரணம் கேட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து முப்பையூர் விவசாயிகள் கூறியதாவது: எங்கள் பகுதியில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வறட்சி நிலவியது. இந்தாண்டு போதிய மழை பெய்ததால் நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். இந்நிலையில் புரெவி புயலால் எங்கள் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் அந்தசமயத்தில் பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த நெல்மணிகள் பதராகி போகின. பறிச்சல் ஏற்பட்டு, ஒரு வாரத்திற்குள் பால் பிடிக்க வேண்டும். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் பால் பிடிக்கவில்லை.
இதனால் எங்களுக்கு உழவு, நடவு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்று கூறினர்.