சேலத்தில் கவர்ச்சிகர ஈமு கோழி திட்டங்கள் மூலம் ரூ.8 கோடி மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை: முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

சேலத்தில் கவர்ச்சிகர ஈமு கோழி திட்டங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் ரூ.8 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் சூரமங்கலம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், அவரது மனைவி ராதா, ராதாவின் சகோதரர் ராஜா ஆகியோர் இணைந்து 2012-ம் ஆண்டு மே மாதம் 'ஜெய் ஈமு பார்ம்ஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

பின்னர், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகளை அளித்து, கொட்டகை அமைத்து, தீவனம் அளிப்பதோடு, மாதம் ரூ.6,000 ஊக்கத்தொகை, ஆண்டு போனஸாக ரூ.20 ஆயிரம் அளிப்போம் எனவும், 2 ஆண்டுகள் முடிவில் டெபாசிட் தொகை திரும்பி அளிக்கப்படும் என்று ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர்.

இரண்டாவதாக, விஐபி திட்டத்தில் ரூ.1.50 லட்சம் செலுத்தினால், ஈமு கோழிக் குஞ்சுகளை நிறுவனமே வளர்த்துக்கொள்ளும் எனவும், அதற்கு மாதம் ரூ.7,000 ஊக்கத்தொகை, ரூ.25 ஆயிரம் ஆண்டு போனஸ், 2 ஆண்டுகள் முடிவில் கட்டிய பணத்தை திருப்பி அளிப்போம் எனவும் அறிவித்துள்ளனர்.

இந்த கவர்ச்சிகர விளம்பரங்களை பார்த்து மொத்தம் 173 பேர் ரூ.2.33 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால், ஈமு நிறுவனம் குறிப்பிட்டபடி பணத்தை திருப்பி அளிக்காததால் சேலம் வட்டக்காடு, தெக்கம்பட்டியைச் சேர்ந்த கே.செல்வராஜ் என்பவர் 2012 செப்டம்பர் மாதம் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை,கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்த நிலையில், விசராணை முடிவடைந்து இன்று (டிச. 14) தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், நிறுவனத்தின் உரிமையாளர்களான ரஞ்சித்குமார், ராதா, ராஜா ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.29 கோடி அபராதம் விதித்த சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி, அபராதத்தில் ரூ.1.28 கோடியை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

உறவினர்கள் தொடங்கிய நிறுவனம்

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஆர்.ராஜா, அவரது மனைவி சசிகலா, இவர்களது உறவினரான ரஞ்சித்குமார் ஆகியோர் இணைந்து அபி ஈமு பார்ம்ஸ், அபி ஈமு அண்டு அக்ரோ பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 2012 மே மாதம் நிறுவனங்களை தொடங்கி, முதல் வழக்கில் உள்ளது போலவே கவர்ச்சிகரமான ஈமு கோழி வளர்ப்பு திட்டங்களை அறிவித்துள்ளனர்.

அந்த விளம்பரங்களைப் பார்த்து 374 பேர் மொத்தம் ரூ.5.62 கோடி முதலீடு செய்துள்ளனர். பின்னர், ஒப்பந்தப்படி பணத்தை திருப்பி அளிக்காததால் பெருமாபட்டி பகுதியைச் சேர்ந்த கே.ஆர்.தைலன் என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற (டான்பிட்) நீதிபதி ஏ.எஸ்.ரவி, குற்றம்சாட்டப்பட்ட ராஜா, சசிகலா, ரஞ்சித்குமார் ஆகிய 3 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3.36 கோடி அபராதம் விதித்ததோடு, அபராதத்தில் ரூ.3.35 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in