

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானத்துக்கு ரசீது வழங்குவதில்லை.
ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலிக்கின்றனர். போலி மதுபானமும் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் எந்த டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்குவதில்லை.
எனவே, டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனைக்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கவும், மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்தும், போலி மதுபான விற்பனையை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மது விற்பனையே ஒரு கொள்ளை தான். பெரும்பாலானவர்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான் மது வாங்கி குடிக்கின்றனர். இவர்களிடம் மதுபானத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது கொள்ளையடித்தவர்களிடமே கொள்ளையடிப்பது போன்றது.
இதனால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது? நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை கம்பெனிகளிடமிருந்து தமிழக அரசு மதுவை வாங்குகிறது? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது விற்பனை, லாபம், செலவீனம் எவ்வளவு? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.