

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் தவிர மற்ற இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்களும், கடைக்காரர்களும் வாங்குவதில்லை.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயத்திற்கு இன்று பிரியாணி வழங்கப்படுவதாக சமூக வலைதளங்கள் மூலமாக தகவல் பரவியது.
இதை படித்த பொதுமக்கள் இன்று (டிச. 14) அந்த பிரியாணி கடை எங்கு உள்ளது என்று தேடி அலைந்தனர். பின்னர், அக்கடை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் உள்ள தள்ளு வண்டி கடை தான், அந்த பிரியாணி கடை என்பதை அறிந்தனர். அங்கு வைத்திருந்த பேனரில் '10 ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி கிடைக்கும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தேடி எடுத்துவந்த 10 ரூபாய் நாணயங்களுடன் கடை வாசலில் குழுமினர். ஆனால், பல மணி நேரம் காத்திருந்தும் பிரியாணி வரவில்லை. இதனால் அங்கு காத்திருந்தவர்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் பிரியாணி தயாரிக்கும் இடத்துக்கு தேடிச் சென்றபோது அங்கும் பிரியாணி வழங்கப்படவில்லை.
கடையில் தான் பிரியாணி கொடுக்கப்படும் என்று தெரிவித்ததால் மீண்டும் பொதுமக்கள் கடைக்கு திரும்பினர். பிரியாணி வாங்க குவிந்திருந்த கூட்டத்தை கண்ட போலீஸார் கூட்டத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் வேறு ஒரு இடத்தில் பிரியாணி கடையை திறந்தனர். அங்கும் ஏராளமானோர் குவிந்ததால் திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த போலீஸார், அங்கும் சென்று அந்த கூட்டத்தை விரட்டி அடித்தனர்.
இதனால், பிரியாணி ரசிகர்கள் மீண்டும் பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கே சென்றனர். வேறு வழியில்லாமல் பிரியாணி கடைக்காரர்கள் அந்த இடத்திலேயே பிரியாணி வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர், அங்கேயே இன்று பிற்பகல் பிரியாணியை விற்பனை செய்தனர். இதனை நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பெற்றனர். இருப்பினும், கூடிய கூட்டத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே பிரியாணி கிடைத்தது.