

புதுச்சேரியில் 26 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஐஏஎஸ் குடியிருப்பிலுள்ள 14 அதிகாரிகளின் வீடுகள் சீரமைப்பு மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க கடந்த 9 ஆண்டுகளில் ரூ.2.97 கோடி செலவாகியுள்ளது. இதனால் கூடுதலான அதிகாரிகளை திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி பிராந்தியம் 290 சதுர கிலோமீட்டரும், காரைக்கால் பிராந்தியம் 161 சதுர கிலோமீட்டரும், மாஹே 20 சதுர கிலோமீட்டரும் உடையது. ஆனால், இங்கு தற்போது 26 ஐஏஎஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம், வாகனம், பயணப்படி ஆகிய வகையில் அரசு நிதி வெகுவாக செலவிடப்பட்டு வருவதாக அமைச்சரவையினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதுச்சேரி கோரிமேடு இந்திராநகரில் 14 ஐஏஎஸ் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு பராமரிப்பு செலவு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு அதிக அரசு நிதி செலவிடப்படுவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்து தகவல்கள் பெற்றது தொடர்பாக இன்று (டிச. 14) கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளில் ரூ.2.54 கோடிக்கு 14 ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகள் சீரமைத்துள்ளனர். இந்த குடியிருப்புகளுக்கு எல்இடி டிவி, வாஷிங் மெஷின், டபுள் டோர் பிரிட்ஜ், சோபா செட், வீட்டு உபயோகப்பொருட்கள் என ரூ.42.81 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். இதன் மொத்த செலவு ரூ.2.97 கோடி. 14 ஐஏஎஸ் அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கே இத்தனை கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 ஐஏஎஸ் அதிகாரிகள் செலவையும் சேர்த்தால் இன்னும் பல கோடி கூடுதலாகும்.
புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. பல அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் தரப்படாமல் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளது. அமைச்சர்களின் அலுவலகங்களுக்கே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சோபா செட்டுகள் மாற்றப்படுகிறது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. இவ்வீடுகளில் ஏற்கெனவே இருந்த பொருட்களின் நிலை என்னவானது, யாரிடமுள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும். சிறிய யூனியன் பிரதேசத்துக்கு அதிகளவாக 26 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள நிலையை மாற்றி தேவைக்கு அதிகமானோரை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளேன்" என்று தெரிவித்தார்.