Published : 22 Oct 2015 09:00 AM
Last Updated : 22 Oct 2015 09:00 AM

திருச்சி அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

திருச்சி அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக் கப்பட்டன. காயமடைந்த 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 46 பயணிகளுடன் அரசு விரைவுப் பேருந்து நாகர் கோவிலுக்கு புறப்பட்டது. கன்னியா குமரி மாவட்டம் ரங்காடு கிரா மத்தைச் சேர்ந்த செபஸ்டின் (41) பேருந்தை ஓட்டினார். இரவு 9.45 மணியளவில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களுர் என்ற இடத்தில் பஸ் வந்தது.

அப்போது அந்த இடத்தில் இரும்புத் தகடுகள் ஏற்றி வந்த டிரெய்லர் லாரி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மிக அருகில் வந்தபிறகே பேருந்து ஓட்டுநர் இதை கவனித்துள்ளார். இதனால், அவசரமாக பேருந்தை வலதுபுறமாக திருப்ப முயன்றார். அதற்குள் லாரியின் பக்கவாட்டில், பேருந்தின் இடதுபுறம் மோதியது.

படிக்கட்டுக்கு அருகில் தொடங்கி, கடைசி வரை உள்ள அனைத்து இருக்கைகளும் இரும்புத் தகடினால் கிழிக்கப் பட்டது. அவற்றில் அமர்ந்திருந்த சில பயணிகளின் கால்கள் துண் டானது. விபத்து பற்றி தகவலறிந்த சமயபுரம் போலீஸார் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மத்திய மண்டல ஐஜி ராமசுப்பிரமணி, டிஐஜி செந்தாமரைக்கண்ணன், எஸ்பி ராஜேஸ்வரி உள்ளிட்டோரும் அங்கு வந்து மீட்புப் பணியை விரைவுபடுத்தினர்.

பேருந்துக்குள் ரத்த வெள்ளத் தில் கிடந்த 24 பேரை மீட்டு திருச்சி, ரங்கம் அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில் சாலை பகுதியைச் சேர்ந்த திருமால் மனைவி கோடீஸ்வரி (35), இவரது மகன் ஆர்த்திராஜ் (11), திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகிலுள்ள தெற்கு புளிமங்கலத்தைச் சேர்ந்த வினோத் (28), சிந்துபூந்துறை நடுத் தெருவைச் சேர்ந்த ஹரிகணேஷ் (19), நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்த மனோஜ் (22), உண்ணாமலைக்கடையைச் சேர்ந்த டென்னிஸ் ஹெட்மெட், அகஸ்தீஸ்வரம் அருகிலுள்ள கீழக்குளத்தைச் சேர்ந்த ஆன்டோ சஞ்சு (20), சென்னை மேடவாக்கம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சுபீன் (23), திருச்சி மாவட்டம் சமய புரம் அருகிலுள்ள பள்ளிவிடை யைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அன்னம்மாள் (34) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர். மற்ற 15 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்பதாக உறுதி அளித்தனர். இறந்த 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சமயபுரம் போலீஸார், அரசுப் பேருந்து ஓட்டுநர் செபஸ்டினை கைது செய்தனர். நின்றுகொண்டிருந்த லாரியின் டிரைவரான மதுரையைச் சேர்ந்த ரவிச்சந்திரனிடம் (46) தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய திருமால், சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி. சத்திரம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முத்துராஜ் குடும்பமும் அங்கேயே வசித்து வருகிறது. ஆயுதபூஜை தொடர் விடுமுறை வந்ததால் இருவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் சொந்த ஊரான நாசரேத்துக்கு சென்றுள்ளனர். விபத்தில் திருமாலின் மனைவி, மகன் இறந்துவிட்டனர். மற்ற 6 பேர் காயமடைந்தனர். பலியான பலரும் விடுமுறையை கொண்டாட ஊருக்கு சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.

ரூ.1 லட்சம் நிதியுதவி

உயிரிழந்தவர்கள் குடும்பங் களுக்கு தலா ரூ. 1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல் களை அவர்கள் சொந்த ஊர் களுக்கு அரசு செலவில் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலையோரம் லாரி நின்றது ஏன்?

போலீஸார் கூறும்போது, ‘‘திருச்சி துவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனிக்காக சென்னை துறைமுகத்தில் லாரியில் இரும்புத் தகடுகள் ஏற்றி வரப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக அதில் 59.48 டன் இரும்பை ஏற்றி வந்துள்ளனர். மேலும் லாரியின் வெளிப்பகுதியிலும் சுமார் 1 அடி அளவுக்கு இரும்புத் தகடுகள் நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றில் சிவப்பு விளக்கோ, எச்சரிக்கை பிரதிபலிப்பானோ இல்லை.

சமயபுரம் அருகிலுள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்துவதாக தெரிந்ததும் அபராதத்துக்கு பயந்து சுங்கச்சாவடிக்கு முன்னதாகவே லாரியை நிறுத்தியதாக தெரிகிறது. ஆனால், லாரியில் டீசல் குறைந்துவிட்டதால், ஓரத்தில் நிறுத்தியதாக ஓட்டுநர் கூறுகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x