

வேளாண் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பபெறவேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர், கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்த திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு செய்தனர்.
இதன்படி இன்று விவசாயிகள் சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் ஊர்வலமாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். போராட்டத்திற்கு அனுமதியில்லாததால் இவர்களை கலைந்துசெல்ல போலீஸார் கூறினர்.
இதை மறுத்து சாலையிலேயே படுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
இதனால் போலீஸார், போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பரபரப்பு காணப்பட்டது.
முன்னதாக ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போராட்டத்தில் சித்தையன்கோட்டை விவசாயிகள் சங்க தலைவர் ரசூல்மொய்தீன், மலைத்தோட்ட விவசாயிகள் சங்க தலைவர் தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 150 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.