வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து பிரச்சாரம் செய்ய முடிவு; இடைத்தரகர்களற்ற வேளாண் திட்டங்கள் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன: பாஜக மாநில விவசாய அணித்தலைவர் தகவல்

ஜி.கே.நாகராஜ்
ஜி.கே.நாகராஜ்
Updated on
1 min read

இடைத்தரகர்களற்ற வேளாண் திட்டங்கள் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என, பாஜக மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பாஜக மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் கோவையில் இன்று (டிச. 14) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் 15-ம் தேதி (நாளை) முதல் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஒருவார காலம் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பரப்புரை பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு நேரடியாக விவசாயிகளை சந்தித்து புதிய வேளான் சட்டங்களின் நன்மைகளை விளக்க உள்ளனர்.

தமிழகத்தில் 5 முக்கிய இடங்களில் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்க பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, இச்சட்டங்களை ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் திமுக தனது 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்கள்.

2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் இடைத்தரகர்கள் இன்றி சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்யும் புதிய சட்டம் உருவாக்குவதாக உறுதியளித்துள்ளது.

ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மற்றும் திமுக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக பிரச்சாரம் செய்து, பெயரளவுக்கு சிலருக்கு தள்ளுபடி செய்து கடந்த காலங்களில் விவசாயிகளை கடனாளி ஆக்கினார்கள்.

காவிரி, முல்லை பெரியாறு மற்றும் அத்திக்கடவு அவிநாசி திட்டம், நதிநீர் இணைப்பு போன்ற நீர் மேலாண்மை திட்டங்களை வெறும் தேர்தல் அறிக்கையாகவே திமுக - காங்கிரஸ் தெரிவித்து வந்த நிலையில், தற்போதைய மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல நீராதாரத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் பின்னணியில் டெல்லியில் இடைத்தரகர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நெல், கோதுமை உள்பட 6 பொருட்கள் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டு, பெயரளவில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 17 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லுக்கு 2.4 மடங்கும், கோதுமைக்கு 1.77 மடங்கும், சிறுதானியங்களுக்கு 75 மடங்கும், எண்ணை வித்துக்களுக்கு 10 மடங்கும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேங்காய் கொப்பரை கொள்முதல் 2013-ல் கிலோ ரூ.52 ஆக இருந்த நிலையில் தற்போது குறைந்தபட்ச ஆதார விலை ரூ.99.60 ஆக இருந்து வருகிறது.

இடைத்தரகர்களற்ற வேளாண் திட்டங்கள் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதே உண்மை".

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in