Published : 14 Dec 2020 01:09 PM
Last Updated : 14 Dec 2020 01:09 PM

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் டிச.18-ல் உண்ணாவிரதம் அறிவிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், டிச.18 அன்று சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், அதன் எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, இந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப்படுத்தி வருகிறது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணவுரிமைகளையும், உழுதுண்போரின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கண்ணியமாகப் போராடி வரும் தேசப் பற்றாளர்களான விவசாயப் பெருமக்களை அவமதித்திடும் வகையில் - அந்தப் போராட்டத்தில் “மாவோயிஸ்டுகள்” புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மண்ணை வாரியிறைத்துப் பேசியிருப்பதற்கும், மத்திய அமைச்சர்கள் பலரும் இதுபோன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகளின் மகத்தான போராட்டத்தைச் சரியாக மதிப்பிடாமல் அவமதித்துவரும் மத்திய பாஜக அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் - மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் - இருக்கும் முதல்வர் பழனிசாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்திற்கும் உரியது.

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திமுக தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்வுபூர்வமாகத் தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பாஜக அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை.

இந்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவுப் பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும்- அவர்களின் உரிமைகளையும் புறக்கணித்து; தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுகளுடனும் இப்போராட்டத்தைக் கையாளும் மத்திய பாஜக அரசினையும் - அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் முதல்வர் பழனிசாமியையும் கண்டித்து, டெல்லியில் கரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் - அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் - டிச.18 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும்.

ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம். அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம்''.

இவ்வாறு திமுக கூட்டணிக் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x