

நம் நாட்டுக்காக சேவையாற்ற இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று ஏர் மார்ஷல் வர்தமான் வலியுறுத்தினார்.
ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில்எஸ் ஃபவுண்டேஷன் சார்பில் ‘மறத்தல் தகுமோ’ என்ற நிகழ்ச்சிஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு கரோனா பரவல்காரணமாக ‘மறத்தல் தகுமோ’நிகழ்ச்சி போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டன. ஓவியம்,புதுமொழி எழுதுதல், பதாகை தயாரிப்பு, தனித்திறன் வெளிப்பாடு (காணொலி) ஆகிய 4 பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகளில் வென்றமாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதற்கான விழா இணையவழியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனின் தந்தையும், ஏர் மார்ஷலுமான எஸ்.வர்தமான் பேசியதாவது:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவுரைப்படி, அனைத்து இளைஞர்களும் தங்கள் கனவை நோக்கி பயணிக்க வேண்டும். அதனுடன், நமது சேவையை நாட்டுக்கு ஆர்வத்துடன் வழங்கவும் முன்வரவேண்டும். அதற்காக, எல்லோரும் ராணுவத்தில் சேர்ந்துதான் சேவையாற்ற வேண்டும் என்பதுஇல்லை. அனைவரும் தாங்கள் பணிபுரியும் அல்லது விரும்பும் துறைகளில், நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல பங்களித்தாலே போதும்.
உலக அளவில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்ற நாடுகளைவிட கரோனாவை இந்தியா சிறப்பாக கையாண்டு வருவதை அதற்கு உதாரணமாக கூறலாம். அதேபோல, அனைத்து துறைகளிலும் நாட்டை முதன்மை இடத்துக்கு கொண்டுவர உலகளாவிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகளை இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந் நிகழ்ச்சியில் எஸ் ஃபவுண்டேஷன் நிறுவன அறங்காவலர்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரநாராயணன், கே.சுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.