

தேமுதிக கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேமுதிக தலைவர்விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள்எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும்67 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி நிலைப்பாடு, தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
கரோனா காலத்தில் உயிருக்கும்அஞ்சாமல் பணிபுரிந்த மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ‘நிவர்’, ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைகுறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேமுதிக தயாராகி வருகிறது. மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தேர்தல் நமக்கு முக்கியமானது. இதில், தேமுதிக மகத்தானவெற்றி பெறும்.
நிச்சயமாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். மார்ச் அல்லது ஏப்ரலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார்.
தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஜனவரியில் நடக்க உள்ளது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை விஜயகாந்த் அப்போது அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.