Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

விவசாயிகளுக்கு 100 சதவீதம் நல்லது செய்பவர் பிரதமர் நரேந்திர மோடி: சகோதரர் பிரகலாத் மோடியின் சிறப்பு நேர்காணல்

பிரதமரின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் ‘பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரச்சார் பிரசார் அபியான்’ என்ற தன்னார்வ அமைப்பின் தேசியத் தலைவராக இருப்பவர் பிரகலாத் மோடி. இவர் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் ஆவார். விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக மதுரை வந்த அவர் `இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த சிறப் புப் பேட்டி:

பிரதமரின் திட்டங்கள் தமிழ கத்தில் கடைசி ஏழை மக்கள் வரையில் சென்றடைகிறதா? என ஆய்வு செய்ய வந்துள்ளோம். எங்களிடம் இதுவரை உதவி கேட்டு வந்த 36 கோடி மக்களில் 32 கோடிபேரின் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டோம். 8 கோடி பேருக்குசமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளோம். இதன் மூலம் 40 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் 8 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளோம். 8 கோடி பேருக்கு இலவச மருத்துவ வசதியை அளித்துள்ளோம்.

எந்த அதிகாரி திட்டங்களைமுறையாக நிறைவேற்றவில் லையோ அவருக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். தமிழகத்தில் மோடியின் 160 நலத் திட்டங்களையும் மக்களிடம் சேர்ப்போம். இதற்காக 22 லட்சம் தன்னார்வலர்கள் என்னுடன் இணைந்துஉழைக்கிறார்கள். தேவைப்பட் டால் இதை 22 கோடியாகக்கூட உயர்த்துவோம் என்றார். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியது:

மோடி அரசின் சிறப்பான செயல்பாடு என எதைக் குறிப்பிடுவீர்?

ராகுல் காந்தி சார்ந்த கட்சியின் ஆட்சியில் ரூ.100 மதிப்பிலான திட்டத்தில் ரூ.15 மட்டுமே மக்களிடம் போய் சேரும். மோடியின் திட்டத்தில் ரூ.100-ம் முழுமையாகச் சென்றடையும். இங்கு இடைத்தரர்களுக்கு வேலையே இல்லை.

மத்திய அரசின் சிறந்த திட்டம் எது?

160 திட்டங்களில் எது மக்களுக்கு அதிகம் சேர்ந்ததோ அதுதான் நல்ல திட்டம்.

வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கிறார்களே?

விவசாயிகளுக்கு 100 சதவீதம் நல்லது செய்பவர் மோடி. விவசாயிகளுக்கு எது தேவையோ அதை நிச்சயம் செய்து முடிப்பார்.

சிறு வயது முதல் மோடியுடன் இருந்த காலத்தில் அவரின் மறக்கவே முடியாத நிகழ்வு குறித்து?

பிரதமர் பற்றி புத்தகமே போட்டாச்சே. அதில் அனைத்து விஷயங்களும் உள்ளன.

மோடியிடம் தங்களுக்கு பிடித்த குணம் எது?

கர்வமும், ஆணவமும் எப்போதும் மோடியிடம் இருந்ததில்லை. பிரதமருக்கான மரியாதை வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். மோடி எப்போதும் சாதாரண மக்களைத்தான் சிந்தித்துக் கொண்டே இருப்பார்.

சகோதரர்களில் யாரிடம் உங்கள் தாயார் அதிக பாசம் காட்டுவார்?

எந்த பாகுபாடு காட்டியும் எங்களை தாயார் வளர்க்கவில்லை.

மோடியை அடிக்கடி சந்திப்பீர்களா?

நியாய விலைக் கடைகளில்இலவச அரிசித் திட்ட பிரச்சாரத்துக்காக 14 ஆண்டுகளுக்கு முன்முதல்வராக இருந்தபோது மோடியை சந்தித்தேன். இந்தியாவின் மகானான மோடியை சந்திக்க எங்களுக்கு மட்டும் உரிமை இல்லை. அதைப் பற்றி நாங்கள் நினைப்பதும் இல்லை. மோடியை எல்லோரும் சந்திக்கலாம்.

தமிழகத்தில் பிடித்த அரசியல் கட்சித் தலைவர் யார்?

தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்குப் பிடித்தவர்களே. தலைவர், தொண்டர் என எந்தப் பாகுபாடும் பாஜக.வில் இல்லாததால், தனிப்பட்டுயாரையும் அப்படி நினைப்ப தில்லை.

தமிழக மக்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா?

தமிழக மக்கள் நல்லவர்கள். சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். மோடியின் திட்டங்களை நிறைவேற்ற வழிவிட்டாலே போதும். 160 திட்டங்களும் தமிழக மக்களை முழுமையாகச் சென்றடையும். அப்போது அவர்களின் வாழ்க்கைத்தரம் மேலும் 4 மடங்கு உயரும்.

மத்திய அரசின் திட்டம் என வெளிப்படையாக இங்குள்ள வர்கள் கூறுவதில்லையே?

அதற்குத்தானே நாங்கள் இருக்கிறோம்.

அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கப்போகும் தமிழக மக்களுக்கு தங்களின் செய்தி?

உலகிலேயே நம்பர் 1 என்று சொல்லும் அளவுக்கு மிகத் தெளிவான மக்கள் தமிழர்கள். அவர்களை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பிரச்சாரக் குழுவின் தமிழகத் தலைவரும் வணிக வரித் துறையின் முன்னாள் கூடுதல் ஆணையருமான ராஜாராமன், செயலர் முரளிதரன், விளம்பர ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் ரெட்டி, தேசிய நிர்வாகி கோஷ்மகராஜ், மதுரை மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x