

இளைஞர்களிடையே நீச்சல், ஓட்டம், இறகுப்பந்து போன்று சைக்கிள் ஓட்டுவதும் ஒரு விளையாட்டு என விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சைக்கிள் ஓட்டுவதால் உடற்பயிற்சி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் மாசுபடாது என வலியுறுத்தவும் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் இருந்து ராமேசுவரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
கடந்த 11-ம் தேதி சைக்கிள் ஓட்ட வீரர்கள் 4 பேருடன் இணைந்து சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று ராமேசுவரம் வந்தார். தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்ற அவர் சென்னை- ராமேசுவரம் இடையே 600 கி.மீ. தூரத்தை 36 மணி நேரத்தில் கடந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சைக்கிளிங் என்பது ஒரு விளையாட்டு. இளைஞர்கள், மாணவர்களுக்கு சைக்கிள் பயிற்சி அளிப்பது நல்லது. வளர்ந்த நாடுகளில் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் சைக்கிளை பயன்படுத்துகின்றனர். இதனால் காற்று மாசுபாடு குறையும். உடலுக்கு நல்ல பயிற்சியும் கிடைக்கும். வெளிநாடுகளில் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்கின்றனர்.
ஒவ்வொரு குடிமகனும் உடல், மன நலத்தோடு இருக்க சைக்கிள் ஓட்டுவது அவசியம் என்பதை வலியுறுத்தவே இந்த பயணத்தை நாங்கள் விளையாட்டாகத் தொடங்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.