

சென்னைக்கு விஜயம் (பட்டினப் பிரவேசம்) செய்துள்ள பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் பரமஹம்ஸேத்யாதி நிவாஸ கோபால மஹா தேசிகன் சுவாமிகள், நேற்று காலை திருநீர்மலையில் நிவாசப் பெருமாள் சந்நிதியில் லட்சுமி ஹயக்ரீவனுக்கும் மற்ற பெருமாள்களுக்கும் தனுர்மாத ஆராதனை மேற்கொண்டார். மார்கழி மாதம் முழுவதும் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ரங்கத்தில் உள்ள பவுண்டரீகபுரம் மத் ஆண்டவன் ஆசிரமத்தில், 10-வது ஆச்சாரியனாக எழுந்தருளியிருக்கும் பறவாக்கோட்டை சின்ன ஆண்டவன் பரமஹம்ஸேத்யாதி நிவாஸ கோபால மஹா தேசிகன் ஸ்வாமிகள், நேற்று முன்தினம் இரவு சென்னை குரோம்பேட்டை அருகே திருநீர்மலையில் உள்ள ஆசிரமத்தில் எழுந்தருளியுள்ளார்.
நேற்று காலை நிவாஸப் பெருமாள் சந்நிதியில் தங்கி, முநித்ரயசம்ப்ரதாய ப்ரவர்த்தகர் திருக்குடந்தை தேசிகனால் ஆராதிக்கப்பட்ட லக்ஷ்மி ஹயக்ரீவனுக்கும் மற்ற பெருமாள்களுக்கும் தனுர் மாத ஆராதனை மேற்கொண்டார்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும்பல்வேறு உற்சவங்கள் நடைபெறஉள்ளன. வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், அடுத்தடுத்த நாட்களில் நம்மாழ்வார் திருவடி தொழில், இயற்பா சாற்றுமுறை, தேசிக பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெற உள்ளன.
பெரிய பறவாக்கோட்டை ஆண்டவன் கோபால தேசிக மஹா தேசிகனின் நூற்றாண்டை முன்னிட்டு, வரும் 28-ம் தேதி, மார்கழி மாத ரோஹிணி திருநட்சத்திரம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தினமும் மாலை 6.30முதல் 7.30 மணிவரை, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மாருதி நகரில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோயிலில், ‘கோதை தமிழ்' என்ற தலைப்பில் திருப்பாவை உபன்யாசமும் நிகழ்த்த உள்ளார்.சுவாமிகள், மார்கழி மாதம் முழுவதும் திருநீர்மலை ஆசிரமத்தில் தங்கி பல்வேறு ஆன்மிக பணிகளை மேற்கொள்ள இருப்பதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.