

மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து பயனாளிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 50 கோடி தொழிலாளர்களுக்கு, மருத்துவம் மற்றும் முதுமை கால உதவித் தொகை, வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகை, ஓய்வூதியம் உட்பட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களைமத்திய தொழிலாளர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இதில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமேதொழிலாளர் மாநில காப்பீடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி போன்ற சமூக பாதுகாப்பு பலன்கள் கிடைக்கின்றன. எஞ்சியவர்கள் முறைப்படுத்தப்படாத துறைகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம்கூட கிட்டுவதில்லை. எனவே, சமூக பாதுகாப்புதிட்டங்கள் குறித்து பயனாளிகள்மத்தியில் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், பிரதம மந்திரி கிசான் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இத்திட்டங்கள் குறித்து அவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த அளவே பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
குறுஞ்செய்தி, மின்னஞ்சல்
எனவே, சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து பயனாளிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, கிராமப்புறங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அத்துடன், சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து போதிய அளவு விளம்பரப்படுத்த வேண்டும்.
மேலும், அவர்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், அவர்களுக்கு மொபைல் மூலம் குறுஞ்செய்தி மற்றும் மின்னணு முறையில் தகவல்களை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனாளிகளை அதிகளவில் சேர்க்க வேண்டும். மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், பிரதம மந்திரி கிசான் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனாளிகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேர்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை எளிதாக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் மூலம் இத்திட்டங்களின் பயன்கள் விரைவாக பயனாளிகளுக்கு சென்று சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.