Published : 13 Dec 2020 07:41 PM
Last Updated : 13 Dec 2020 07:41 PM

என் அருமை மெரினா கடற்கரை: எத்தனை சுவாரஸ்ய நிகழ்வுகள், சரித்திரச் சம்பவங்கள்!

சென்னை

8 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் மெரினா கடற்கரையில் உள்ள மணல் துகள்கள் அளவுக்கு ஏராளமான கதைகள் உள்ளன. அதில் கையளவு மணல் துகளாய் சில சுவாரஸ்ய, நெகிழ்வூட்டுகிற, மகிழ்வூட்டுகிற, சோக சம்பவங்களின் பதிவு இது.

8 மாதங்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் மெரினா கடற்கரைக்கும் எளிய மக்களுக்கும் நீண்டகால பந்தம் உண்டு. எளிய மக்கள் குடும்பத்துடன் வந்து களிக்கும் இடம் மெரினா. சுற்றியும் மாட்டாங்குப்பம், நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய மீனவக் குடியிருப்புகள் உள்ளன. கடலை நம்பிய அம்மக்களின் வாழ்வாதாரப் பகுதி இது.

மெரினா கடற்கரையில் மழைக்காலம் தவிர மற்ற நேரங்களில் பொதுமக்கள் வருவார்கள். விடுமுறைக் காலம், பண்டிகைக் காலங்களில் கூட்டம் அலைமோதும். கோடை காலத்தில் சென்னைவாழ் மக்களின் விலையில்லாப் பொழுதுபோக்கு இடம் மெரினா கடற்கரைதான். அப்படி வரும் பொதுமக்களை நம்பி தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் உள்ளனர்.

காந்தி பீச், கண்ணகி சிலை, அண்ணா சதுக்கம் என மூன்று இடங்களில் தனியாக கடற்கரைக்கு வரும் மக்களுக்காக வரிசையாக விளையாட்டுப் பொருட்களிலிருந்து விலை உயர்ந்த பொருட்கள் வரை விற்கும் கடைகள், கடற்கரை மணற்பரப்பில் ஆங்காங்கே பஜ்ஜி, போண்டா, மீன் வறுவல், கோழி வறுவல், சுண்டல் எனக் கொறிக்கவும், ஐஸ்கிரீம் வண்டிகளும், கரும்புச்சாறு, ஜூஸ் வகைகளும் இருக்கும்.

கடற்கரைக்கென்றே புகழ்பெற்ற தேங்கா, மாங்காய் பட்டாணி சுண்டல், கைமுறுக்கு, சமீபகாலமாக கேன் டீ, சுக்கு காப்பி என விற்கும் சிறு வியாபாரிகள், எளிய மக்களுக்குச் சோறு போடும் இடம் அது. குதிரை சவாரி, ராட்டினம், பஞ்சு மிட்டாய், கடற்கரைக்கு வரும் தம்பதி, காதலர்களிடம் செல்லமாக அதட்டி மல்லிகைப் பூவை விற்கும் பூக்கார அம்மாக்கள் என்று கடற்கரை ஒரு விழாவுக்குரிய இடமாக இருக்கும்.

‘முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்’ என பூக்காரி படத்தின் பாடலில் மெரினா கடற்கரை முழுவதும் சுராங்கனி ரெஸ்ட்டாரன்ட், படகு சவாரியைக் காட்டுவார்கள். வெளிநாடுபோல் இருக்கும். எப்போதுமே பரபரப்பாக இருக்கும் மெரினா, பலருக்கும் வாழ்வளித்த மெரினா, கடந்த 8 மாதங்களாக மக்கள் அனுமதி மறுக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது.

மெரினாவின் காலை அழகை எழுத்தால் வடிக்க முடியாது. ஆயிரக்கணக்கில் வரும் புறாக்கூட்டம், வாக்கிங், ஜாக்கிங் போகும் மக்கள், அருகம்புல் சாறு விற்கும் கடைகள் எனக் களைகட்டும். கலங்கரை விளக்கத்தில் ஏறினால் 32 கி.மீ. தொலைவுக்குக் காணலாம் என்பார்கள்.

தற்போது அத்தகைய மெரினா கடற்கரை மீண்டும் பொலிவுடன் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட உள்ளது. இப்படிப்பட்ட மெரினாவுக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் பிரசித்தி பெற்றது சென்னை மெரினா கடற்கரை. விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் சம்பந்தப்பட்டது மெரினா கடற்கரை. மெரினா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பேசாத தேசியத் தலைவர்களே இல்லை. காந்தி, திலகர், நேதாஜி என தேசியத் தலைவர்கள் பேசிய இடம் இங்கு திலகர் திடலாக கண்ணகி சிலையின் பின்புறம் இருந்தது. தற்போது கடற்கரையில் கூட்டம் போடக்கூடாது என்பதற்காக அதை இடித்துவிட்டார்கள்.

பாரதியாரின் தொடர் தேசப் போராட்டப் பொதுக்கூட்டங்கள் இங்கு நடந்துள்ளன. அதன் பின்னர் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் உரையாற்றியுள்ளனர். சென்னையின் பாரிமுனை தொடங்கி-பெசன்ட் நகர் வரை மிக நீளமான 13 கி.மீ. தூரம் கொண்ட மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதி பிரசித்தி பெற்ற சுற்றுலாப் பகுதியாகும்.

வரிசையாக அரசியல் தலைவர்கள் சிலை முதல் அவ்வையார் சிலை, கண்ணகி சிலை வரை அமைக்கப்பட்டுள்ளது இக்கடற்கரைக்குள்ள சிறப்பு. அதேபோன்று மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடங்களும் இங்குண்டு. இன்னொரு சிறப்பும் கடற்கரைக்கு உண்டு அது ரேடியோ பீச். இன்று கையடக்க செல்போனில் ரேடியோ உள்ளது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் இங்கு விளக்கு கம்பம் போல் குழாய் ஸ்பீக்கரில் ரேடியோ நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவார்கள்.

ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் குறிப்பாக காணும் பொங்கல் காலத்தில் எங்கிருந்துதான் வருவார்களோ எனும் அளவுக்கு காலையிலேயே கட்டுச்சாத மூட்டையுன், மாட்டு வண்டியில் சென்னை மற்றும் புறநகர் மக்கள் இங்கு கூடுவதுண்டு. காலம் போகப்போக அது மாறிவிட்டது, ஆனால், மக்கள் கூடுவது மாறவில்லை. அந்த நேரம் 2 லட்சத்துக்கும் மேல் மக்கள் கூடுவார்கள். பரபரப்பான சாலையை ஒட்டி மிகப்பெரிய கடற்கரை மணற்பரப்பு மெரினாவின் சிறப்புகளில் ஒன்று.

வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்று இது. ஆறுவழிச் சாலையான காமராஜர் சாலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் குவிவது சிறப்பான ஒன்று. அந்த நேரத்தில் சாலை நடுவே கேக் வெட்டிப் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். பல படங்களின் சினிமா ஷூட்டிங்கில் சென்னை என்றால் 4 இடங்கள் காட்டப்படும். எல்ஐசி, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், உழைப்பாளர் சிலை, காந்தி சிலை.

மெரினாவும் போராட்டமும், அரசியல் நிகழ்வுகளும் பிரிக்கமுடியாத ஒன்று. பல அரசியல் நிகழ்வுகளுக்குப் போராட்டக் களமாக மெரினாவின் சீரணி அரங்கம் இருந்தது ஒரு காலம். மிசாவுக்குப் பின் நேருவின் மகளே வருக, மறப்போம் மன்னிப்போம் என இந்திராவை திமுக தலைவர் விளித்த சரித்திர நிகழ்வு இங்குதான் நடந்தது.

மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது குறித்துப் பேசி இனி அப்படி நடக்காது என ஜெயலலிதா பேசியதும், அதன் பின்னர் தமிழகத்தில் அவர் ஆட்சி மலர்ந்த நிகழ்வு நடந்ததும் இங்குள்ள சீரணி அரங்கில்தான்.

திமுக செங்குத்தாகப் பிளந்து மதிமுக உதயமானபோது விடிய விடிய அண்ணாசாலை வழியாக வந்த பேரணி அதிகாலையில் மெரினா சீரணி அரங்கில் நுழையும் வரை நாஞ்சில் சம்பத் 6 மணி நேரத்திற்கும் பேசிய வரலாறும் இங்கு நடந்தது. கருணாநிதி, ஜெயலலிதாவின் திடீர் போராட்டம் இந்திய அளவில் பிரதிபலித்தது மெரினாவில் நடந்ததுண்டு.

இதற்கு முன்னர் சுனாமி எனும் பேரழிவைக் கண்ட சரித்திர நிக்ழ்வும் 2004-ல் மெரினா கண்டது. அப்போதும் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக மெரினா பூட்டிக் கிடந்த வரலாறு உண்டு. மெரினாவில் தங்கள் உரிமைக்காகப் போராடிய மீனவ மக்கள் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த சோக சம்பவமும் சுனாமிபோல் மீனவ மக்களால் மறக்க முடியாத நிகழ்வு.

மெரினாவில் அடுத்த சரித்திர நிகழ்வு ஜல்லிக்கட்டுப் போராட்டம், மக்கள் திரண்டால் அதிலும் இளைஞர்கள் திரண்டால் சாதிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தைச் சொல்வார்கள். விழாக்கோலம் பூண்ட அந்தப் போராட்டத்தையும் 8 நாட்கள் இரவு பகலாகக் கண்டது மெரினா.

ஜல்லிக்கட்டுப் போராட்டம்தான் பெரிய போராட்டம் என்று நினைப்பவர்களுக்கு மெரினாவையே காக்க 1908-ல் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல் மக்கள் திரண்டு வெள்ளைக்கார அரசுக்கு எதிராகப் போராடி மெரினாவை மீட்ட வரலாறும் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மெரினா கடற்கரை வழியாக கிண்டி வரை ரயில் பாதை அமைக்க முடிவு செய்தபோது மக்கள் திரண்டு மெரினா கடற்கரையைக் காக்க போராட்டம் நடத்தினர். இதனால் ரயில் பாதை அமைக்கும் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட வரலாறு மெரினாவுக்கு உண்டு.

திமுக தலைவர்கள் அண்ணாவும், அதைத் தொடர்ந்து மறைந்த கருணாநிதியும் தன் நெருங்கிய சகாக்களுடன் அடிக்கடி இரவில் மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசி பல முடிவுகளை எடுத்துள்ளதாகச் சொல்வார்கள்.

சிவாஜிக்கு சிலை வைப்பதில் இரு தலைவர்களின் மோதலால் நீதிமன்றம் வரை சென்று அப்போதைய முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்து உருக்கமாக உரையாடியதும், அடுத்து நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டதும் வரலாறு. திடீரென கண்ணகி சிலை மீது லாரி மோதி அகற்றப்பட்டதும், அதை மீண்டும் அதே இடத்தில் வைப்போம் என திமுக ஆட்சியில் மீண்டும் அமைக்கப்பட்டதும் சிலை வரலாறு.

மெரினாவில் இரண்டு முறை கப்பல் கரை தட்டியுள்ளது. இதில் புகழ் பெற்ற வரலாறு 1966-ம் ஆண்டு வீசிய பெரும்புயலால் துறைமுகத்தில் கோதுமை ஏற்ற வந்த ஸ்டமாடிஸ் கப்பல், புயலால் கடுமையாகச் சீரழிக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. அந்தக் கப்பல் அடித்துச் செல்லப்பட்டு மெரினா கடற்கரையில் ஒதுங்கியது. தரை தட்டிய கப்பலைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

அந்தக் கப்பலை மணலிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், ஸ்டமாடிஸ் கப்பலை மீட்க முடியவில்லை. பின்னர் அது ஸ்கிராபுக்காக விற்கப்பட்டு உடைக்கப்பட்டது. அதையும் முழுவதுமாக உடைக்க முடியாமல் கப்பலின் எஞ்சிய பாகங்கள் மெரினா கடற்கரை அலையும் மணலும் சந்திக்கும் இடத்தில் இருந்தது. பலரது உயிரையும் பலி வாங்கியது. கப்பலின் எஞ்சிய பாகங்களைப் பல முறை எடுக்க முயன்றும் முடியவில்லை. சுனாமிக்குப் பின் அந்த மிஞ்சிய பாகங்களும் காணாமல் போயின.

அடுத்து 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீலம் புயலால் பிரதிபா எனும் கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டியது. 6 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்தக் கப்பலைக் காண தினந்தோறும் பொதுமக்கள் வந்தனர். பெரு முயற்சிக்குப் பின் இந்தக் கப்பல் மீட்புக் கப்பல்கள் மூலம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

இப்படிப் பல சம்பவங்களுடன் தொடர்புடைய மெரினாவில் எழுதப்படாத பல சம்பவங்கள் உள்ளன. தற்போது கரோனா பேரிடரால் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் பொதுமக்கள் கூடாமல் வெறிச்சோடிய வரலாறும் சேர்கிறது. சிறு குழந்தைகளுடைய குதூகலத்துடன் இனி பொதுமக்கள் கூடுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x