Published : 13 Dec 2020 12:29 PM
Last Updated : 13 Dec 2020 12:29 PM

ஐ.நா. சபையில் இசைத்த மானாமதுரை கடம்: பாரம்பரியத்தை கட்டி காக்கும் குடும்பம்

மானாமதுரை

மண்பாண்டத் தொழிலுக்கு பெயர் பெற்றது மானாமதுரை. அதற்கு காரணம் இப்பகுதி கண்மாய்களில் கிடைக்கும் களிமண். இதை வைகை ஆற்றின் குறுமணலோடு கலந்து கடம் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றும் ஈடுபட்டு வருகின்றன. கடம் தயாரிப்பில் பாரம்பரியமாக ரமேஷ் என்பவரின் குடும்பம் ஈடுபட்டு வருகிறது. பல இடங்களில் கடம் தயாரானாலும், மானாமதுரை கடத்துக்கு இணையாக இதுவரை எங்கும் தயாரிக்க முடியவில்லை. அதனால் தான் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக் கலைஞர்களும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில இசைக்கலைஞர்களும் மானாமதுரைக்கு நேரில் வந்து கடம் வாங்கி செல்கின்றனர்.

கடம் என்னவோ ரூ.800 முதல் ரூ.1,000-க்கு விற்றாலும், அதன் தரத்தால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து மானாமதுரைக்கு வருகின்றனர். இதுகுறித்து கடம் தயாரிக்கும் கலைஞர் ரமேஷ் கூறியதாவது:

உப்புத் தன்மை இருக்கிறதா என்பதை பார்த்து தான் களிமண்ணை எடுப்போம். நாங்கள் மட்டும் தான் கடம் தயாரிக்கிறோம். இதற்கு முதன்முதலில் வித்திட்டவர் எனது தாத்தாவின் தந்தை உலக வேளாளர் தான். அவரைத் தொடர்ந்து தாத்தா வெள்ளைச்சாமி, தந்தை கேசவன் தயாரித்தனர். எனது தந்தை இறந்ததும் எனது தாய் மீனாட்சியும், நானும் தயாரித்தேன். தாய் மறைவுக்கு பிறகு நான் மட்டும் தயாரித்து வருகிறேன்.

இசை ஆர்வத்தால் நாங்கள் பாரம்பரியமாகத் தயாரித்து வருகிறோம். எனது தாத்தாவும், தந்தையும் ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிப்பர். கடம் தயாரிக்கக் கண்டிப்பாக இசை பற்றி தெரிந்திருக்க வேண்டும். எனக்குப் பிறகு எனது தங்கை மகன் ஹரிகரனுக்கு கடம் தயாரிக்க கற்றுக் கொடுத்து வருகிறேன். கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயகம் தான் எங்களுடைய கடத்தை ஐ.நா. சபையில் வாசித்துக் காட்டி பெருமைப்படுத்தியவர்.

அவரைப் போன்று கடம் கார்த்தி, சுரேஷ், உமாசங்கர், சுகன்யா ராம்கோபால் உள்ளிட்ட இசைக்கலைஞர்களும் கடம் வாங்கிச் சென்றுள்ளனர். எனது தாயார் மீனாட்சி குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் புரஸ்கார் விருது பெற்றுள்ளார்.
தந்தை கேசவன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறந்த மண்பாண்டக் கலைஞருக்கான விருதைப் பெற்றுள்ளார். மார்கழி உற்சவம், தசரா, கோடை விடுமுறை நாட்களில் அதிகளவில் கடம் விற்பனையாகும்.

கடம் பார்ப்பதற்கு பானை மாதிரி இருந்தாலும், அதைவிட வலிமையாக இருக்கும். கடம் 7 கிலோ முதல் 9 கிலோ வரை இருக்கும். நிலத்தில் இருந்து மண் எடுத்து, மழை நீரில் பிசைந்து, காற்றில் காயவைத்து, அக்கினிச் சூளையில் பதமாகச் சுட்டு நேர்த்தியாக கடம் தயாரிக்கிறோம். கடத்துக்குள் ஆகாயம் போன்று வெற்றிடம் இருக்கிறது. இப்படி பஞ்ச பூதங்களின் உதவியால் கடம் தயாரிப்பதால் தான் தேவவாத்தியம் என்கின்றனர். கடம் சங்க இலங்கியங்களிலும் பாடப்பெற்ற பெருமைக்குரியது. எனக்கும் கடம் வாசிக்க தெரியும். ஆனால் கச்சேரிகளில் வாசித்ததில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x