அரசுப் பள்ளியை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய முன்னாள் மாணவர்: கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் திட்டம்

புனரமைப்பு செய்யப்பட்ட குண்டத்தூர் அரசு துவக்கப்பள்ளி.
புனரமைப்பு செய்யப்பட்ட குண்டத்தூர் அரசு துவக்கப்பள்ளி.
Updated on
2 min read

நயினார்கோவில் அருகே அரசு துவக்கப்பள்ளியை முன்னாள் மாணவர் தத்தெடுத்து கட்டிடத்தை புனரமைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது குண்டத்தூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 70 ஆண்டு களுக்கு முன்பு கீற்றுக் கொட்டகையில் துவங் கப்பட்டுள்ளது. பின்னர் 1960-ம் ஆண்டு முதல் ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது 20 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கட்டிடம் சீரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்த நிலையில் இருந்தது.

இதையறிந்த இப்பள்ளியின் முன் னாள் மாணவரான விக்னேஷ்குமார் பள்ளிக் கட்டி டத்தை சீரமைப்பு செய்ய முன்வந்தார். இவர் அமெரிக்காவில் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக பணியாற்றிவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். தற்போது காரைக்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண் மை மையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கிராமப்புறத்தில் பள்ளி துவங்க வேண்டும், கிராமப்புற மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றநோக்கில் கேஆர்பி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். அதன் முதற்கட்டமாக தான் படித்த குண்டத்தூர் கிராமத்தின் பாரம்பரிய அரசுப் பள்ளியை புனரமைத்துள்ளார்.

அதனையடுத்து பள்ளிக்கட்டிடத்தை ரூ. 2 லட்சம் மதிப்பில் தனது சொந்த செலவில் சீரமைத்தும், மாணவர்களுக்கு இருக்கைகள், குடிநீர் வசதி, கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். இப்பள்ளி தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை பெற்றுள்ளது. மேலும் கல்வி தந்தை காமராஜர், அணு விஞ்ஞானி அப்துல்கலாம், திருவள் ளுவர், மகாகவி பாரதியார் என பல்வேறு தலைவர்களின் திருவுருவங்களை பள்ளிக் கட்டிடத்தின் சுவர்களில் ஓவியமாக வரைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தியுள்ளார். பள்ளிக்கூடத்தை தத்து எடுத்து மாணவர்கள் படிப்பதற்கு அடிப்படை வசதிகளை ஏற் படுத்திக் கொடுத்த விக்னேஷ் குமாரையும், அவரது குடும்பத்தினரையும் கிராம மக்கள் பாராட்டினர்.

இதுகுறித்து விக்னேஷ் குமார் கூறியதாவது: எனது தந்தை, நான், எனது சகோதரர் உள்ளிட்டவர்கள் பாரம்பரியமாக படித்த பள்ளி என்பதால் இதை புனரமைத்தோம். பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை எனது அறக்கட்டளை மூலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். வரும் காலத்தில் இணையதள வசதியுடன் சுமார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுக்க உள்ளேன். விவசாயத்தை மேம்படுத்த எனது கிராமத்தில் உள்ள கண்மாயைப் புனரமைக்கவும், விவசாயிகளுக்கு நவீன உபகரணங்களை வாங்கிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in