Published : 13 Dec 2020 12:29 PM
Last Updated : 13 Dec 2020 12:29 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் புனிதமாகக் கருதி வழிபடும் எட்டாவது அதிசயமாய் போற்றப்படும் பொந்தன்புளி மரங்கள்

ஏர்வாடி ஏரான்துரையில் உள்ள பொந்தன்புளி மரம்.

ராமேசுவரம்

எட்டாவது அதிசயமாய் போற்றப்பட்ட பொந்தன்புளி மரங்கள் வெளி நாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்தாலும், மக்கள் புனிதமாகக் கருதி வழிபட்டு வருவதால் அவை அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது. கீரையாகச் சமைத்து உண்ணக் கூடிய இலைகள், ருசிமிக்க பானம் தரக்கூடிய கனி, காகிதம், கயிறு தயாரிக்கப் பயன்படக் கூடிய பட்டைகள், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடிய அடிமரம், பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் என பல மகத்துவங்களை உள்ளடக்கியது பொந்தன்புளி மரங்கள்.

ஆப்பிரிக்க பாலை நிலங்களில், முதன்முதலாக 17-ம் நூற்றாண்டு இறுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் என்னும் தாவரவியலாளர் பதிவு செய்ததால், அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia Digitata) என்று தாவரவியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. ஆங்கிலத்தில் போபாப் (baobab) என்று அழைக்கப்படும்.

பொந்தன்புளி மரங்களின் பிறப்பிடம் ஆப்ரிக்கா, மடகாஸ்கர் மற்றும் அரேபியா தீபகற்பம் ஆகும். இதில் 8 இனங்கள் உள்ளன. ஆப்ரிக்காவில் தங்கி பல்வேறு ஆய்வுகளை நடத்திய புவியியலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் இந்த மரங்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழக்கூடியவை என்பதால், பொந்தன்புளி மரங்களை உலகின் எட்டாவது அதிசயம் என வர்ணித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொந் தன்புளி மரங்கள் பற்றி ஆய்வு செய்து வரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: தமிழ்நாட்டின் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், இயற்கையாக அமைந்த உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகின. இதனால் வெளிநாட்டு வணிகர்கள் பலர் பழங்காலம் முதல் இங்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் பெரியார் நகர்  முனீஸ்வரர் கோயிலில் உள்ள பொந்தன்புளி மரத்தில் உள்ள பொந்து.

அவ்வாறு வந்த அரேபிய நாட்டு வணிகர்களால் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், அரேபியா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன் புளி மரங்கள், ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளன. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரை களுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இம்மரத்தின் விதைகள் பாலைவனப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடப்பட்டுள்ளன.

ராமேசுவரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்த னேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக் குளம் ஆகிய இடங்களில் இந்த மரங்கள் வளர்ந்து வருகின்றன. இலங்கையிலும் மன்னார் உள்ளிட்ட பல இடங்களில் இம்மரங்கள் காணப்படுகின்றன.

பொந்தன்புளி மரத்தின் காய்கள்.

25 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய இதன் அடிமரத்தின் சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை இருக்கும். அத்துடன் நேராக உருளை வடிவில் வளர்ந்து உச்சியில் கிளைகளைப் பரப்புகிறது. ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம், பயன்தரும் கனிகள், பட்டைகள் ஆகியவை இம்மரத்தின் சிறப்புகள்.

ஓராண்டில் ஆறு, ஏழு மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். நீண்ட காம்புகளில் பழுப்பு நிறத்தில் உருவாகும் இதன் காய், பழங்கள் நீண்ட நாட்களுக்கு மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை தமிழர்கள் பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பரப்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

ராமநாதபுரம் பெரியார் நகர், ஏர் வாடி ஏரான்துறை, அழகன்குளம், தங்கச் சிமடம், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் இம்மரத்தை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். ஏர்வாடியில் அம்மரம் இருந்த இடத்தில் முனீஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பெரியார் நகரில் வெட்டிச் சாய்க்கப்பட்ட மரம் தொடர்ந்து வளர் கிறது. தேவிபட்டினத்தில் உள்ள உலகம்மன் கோயில் வளாகத்தில் இம்மரம் புனிதமாக பாது காக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x