தேனியில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள பாரம்பரிய தின்பண்டங்கள்: குதூகலமான 80, 90-களின் குழந்தைகள்!

தேனியில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள பாரம்பரிய தின்பண்டங்கள்
தேனியில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள பாரம்பரிய தின்பண்டங்கள்
Updated on
2 min read

80, 90-களில் சிறுவர்களாக இருந்தவர்களின் நினைவுகளை விட்டு நீங்காத பாரம்பரிய தின்பண்டங்கள் தேனி விற்பனைச் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ‘அந்தக் கால’ குழந்தைகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த தலைமுறையினரின் தின்பண்டங்கள் ரசாயனக் கலப்பின்றி இருந்ததுடன் உடலுக்கு வலு சேர்க்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டன. குறிப்பாக அன்றைய சிறுவர், சிறுமியர்களை கவர ஏராளமான இனிப்பு வகைகள் விதவிதமாக உருவாக்கப்பட்டன.

வெல்லம் கலந்த படிக்கல் மிட்டாய், அரிசி மாவினால் தயாரிக்கப்பட்ட பேப்பர் அப்பளம், வெடி மிட்டாய், நூலை சுழற்றி விளையாடும் சக்கர மிட்டாய், கமர்கட், ஒரே படம் மேல்,கீழாக இருபாலினமாக தோற்றம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அம்மா, அப்பா மிட்டாய், காசு மிட்டாய் (நாணயம் வைக்கப்பட்டிருக்கும்), குச்சி மிட்டாய், ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய் என்று ஏராளமான தின்பண்டங்கள் அன்றைய “எய்ட்டீஸ், நைன்டீஸ்“ குழந்தைகளை குதூகலிக்க வைத்தது.

ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் இப்பொருட்களின் விற்பனை வெகுவாய் தடுமாறத் துவங்கியது. பலம் வாய்ந்த நிறுவனங்கள் முன்பு இந்த குடிசைத் தொழில் படிப்படியாக மறைந்தன. இதனால் 50-க்கும் மேற்பட்ட தின்பண்ட தயாரிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே கடந்த தலைமுறையினரின் மலரும் நினைவுகளாகவே இவை இருந்து வருகின்றன. மீண்டும் பாரம்பரிய தின்பண்டங்களை மீட்டெடுக்கும் வகையில் தேனி யில் இதற்கென சிறப்புக் கடைகள் உருவாகி வருகின்றன.

தேனி பத்திரப் பதிவு பழைய அலுவலகம் அருகில் இதற்கென பிரத்யேக கடையை துவக்கி இருக்கும் வள்ளிக்கண்ணன் கூறுகையில், கடந்த தலைமுறை யினர் சுவைத்து மகிழ்ந்த தின் பண்டங்கள் பல மறைந்து விட்டன. இவற்றை மீண்டும் சந்தைப்படுத்தி வருகிறோம். ஏறத்தாழ 102 வகைகளில் 67 வகையான இனிப்புகளை விற்பனை செய்கிறோம். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பண்டமும் வெவ்வேறு பகுதியில் தயாரிக்கப்படுகிறது. இவற்றை விசாரித்து, சமூகவலைதளங்களில் தேடி இந்தப் பொருட்களை கொண்டு வந்துள்ளோம்.
ரூ.1 முதல் ரூ.10 வரை இப் பொருட்கள் விற்கப்படுகின்றன. விரைவிலேயே காம்போ பேக்கில் அனைத்து வகை மிட்டாய்களும் கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய உள்ளோம் என்றார்.

இதுபோன்ற பொருட்கள் தற்போது தேனி மாவட்டத்தில் அதிகளவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைப் பருவத்தில் சுவைத்து, மலரும் நினைவுகளாக மறைந்து போன பல்வேறு தின்பண்டங்கள் தற்போது மீண்டும் விற் பனை செய்யப்படுவது, சிறுவர்களை விட பெரியவர்களை பல மடங்கு அதிகமாக உற்சாகப்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in