Published : 13 Dec 2020 11:57 AM
Last Updated : 13 Dec 2020 11:57 AM

திண்டுக்கல் மாவட்டத்தின் வறண்ட பகுதி: கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் அய்யலூர் ஆட்டுச்சந்தை

கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்த வாங்கிச் செல்லப்படும் ஆட்டுக்கிடா.

திண்டுக்கல் 

வடமதுரை அருகே அய்யலூரில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை அதனை சுற்றியுள்ள மூன்று (திண்டுக்கல், திருச்சி, கரூர்) மாவட்ட கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை அருகே திண்டுக்கல்-திருச்சி நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது அய்யலூர். சிறிய கிராமமாக இருந்தாலும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களைவிட சற்று பெரியது என்பதாலும், மெயின்ரோட்டில் அமைந்துள்ளதாலும் சுற்றுப்புற கிராமத்தினர் அதிகம் கூடும் இடமாக உள்ளது.

அய்யலூரை சுற்றியுள்ள பகுதிகள் வறண்ட பகுதிகளாக உள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் முழுமையாக விவசாயத்தை நம்பியில்லாமல், விவசாயம் சார்ந்த தொழிலான ஆடு, மாடு, கோழி வளர்ப்பை செய்து வருகின்றனர். விவசாயம் கைகொடுக்காத நிலையில், கால்நடை வளர்ப்பு கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது.

கிராமங்களில் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய அய்யலூருக்கு வந்து செல்லத் தொடங்கிய நிலையில், இன்று பலரும் வந்து ஆடுகளை வாங்கிச் செல்லும் அளவிற்கு அய்யலூர் வாரச்சந்தை பிரபலமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அய்யலூர் அமைந்துள்ளதால் அருகிலுள்ள மாவட்டங்களான கரூர், திருச்சி மாவட்ட கிராமப்புறங்களில் இருந்தும் அய்யலூர் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். வாரந்தோறும் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் விவசாயிகள், கறிக்கடை வைத்திருப்போர், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் குவிகின்றனர்.

பெரும்பாலும் கறிக்கடை வைத்திருப்பவர்கள் அனைத்து வாரமும் சந்தையில் தவறாது ஆஜராகி விடுகின்றனர். ஆடுகளை வாங்கி வேறு சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விசேஷ காலங்களில் குல தெய்வங்களுக்கு நேர்த்திக் கடனாக கிடா வெட்டுபவர்களை அய்யலூர் ஆட்டுச்சந்தையில் காணலாம்.

சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள இளம் குட்டிகள்.

இதில் கறிக்கடைக்காரர்கள் ஆட்டின் எடையை உத்தேசமாக கணக்கிட்டு விலை பேசுகின்றனர். வியாபாரிகள் ஒரு ஆட்டுக்கு ரூ.500, ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் வகையில் ஆடுகளை தேர்வு செய்கின்றனர். ஆனால் கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக கிடா வெட்ட ஆடு வாங்க வரும் பொதுமக்கள் விலையை பற்றி கவலைப்படுவதில்லை. ஆடு பார்க்க கம்பீரமாகவும், முரட்டுத்தனமான தோற்றத்தில் இருப்பதை பார்த்து வாங்குகின்றனர். இதுபோன்ற ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையாகின்றன.

விசேஷ காலங்களுக்கு முன்னதாக நடைபெறும் ஆட்டுச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாவது வழக்கம். கடந்த நவம்பரில் தீபாவளிக்கு முன்னதாக நடந்த சந்தையில், ஆறு மணி நேரத்தில் (காலை 5 முதல் 11 மணி வரை) ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இதேபோல் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் ஆட்டுச்சந்தையிலும் அதிகபட்ச விற்பனை நடைபெறும். விவசாயம் செய்ய இயலாத இக்கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் அய்யலூர் ஆட்டுச்சந்தை பெரும்பங்கு வகித்து வருகிறது.

பச்சிளங்குட்டி முதல் கிடா வரை விற்பனை

வாரந்தோறும் ஆயிரக்கணக்கான ஆடுகள் அய்யலூர் சந்தையில் விற்பனையாகிறது. பிறந்து சில தினங்களே ஆன ஆட்டுக்குட்டி ரூ.750 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக வளர்ப்பதற்காக வாங்கிச்செல்லப்படும் ஆடுகள் ரூ.1500 முதல் விற்பனையாகிறது.

கறிக்கடைக்கு வாங்கிச்செல்லப்படும் ஆடுகள் ரூ.2000 முதல் ரூ.3000 வரை விற்பனையாகிறது. அதிகபட்சாக 20 கிலோ வரை எடையுள்ள ஆடுகள் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கோயில்களுக்கு நேர்த்திக் கடனாக பலியிட வாங்கிச் செல்லப்படும் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

பால் குடி மறக்காத குட்டியை ஆட்டிடம் இருந்து மூன்று நாட்களில் பிரித்து விற்பனைக்கு கொண்டுவந்து விடுகின்றனர். இதுகுறித்து பச்சிளங்குட்டிகளை விற்பனைக்கு கொண்டுவந்த பாப்பாத்தி கூறுகையில், நான் வளர்த்த ஆடு நான்கு குட்டி போட்டது, இரண்டு குட்டிக்கு பால்கொடுக்கும் அளவிற்கு மட்டுமே தாய் ஆட்டிடம் பால் உள்ளது.

இரண்டு ஆடுகளாவது முழுமையாக பால் குடிக்கட்டும் என நினைத்து மீதமுள்ள இரண்டு ஆடுகளை விற்பனை செய்ய வந்துள்ளேன். இந்த பச்சிளம் ஆட்டை வாங்கிச் செல்பவர்கள் இதற்கு புட்டிப்பால் கொடுத்து வளர்த்து விடுவர். மொத்தமுள்ள நான்கு ஆட்டுக்குட்டிகளில் இரண்டு குட்டிகளை விற்பனை செய்வதன் மூலம் குடும்ப செலவுக்கு பணம் கிடைக்கும். மற்ற ஆடுகளையும் பராமரிக்க ஏதுவாக இருக்கும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x