

கொடைக்கானலில் புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் மலைப் பகுதிகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன. மேலும் இரவில் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால் குளிரும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புரெவி புயல் காரணமாக கடந்த வாரம் முழுவதும் தொடர்மழை பெய்துவந்தது.
இதனால் செடிகள், மரங்கள் செழிப்புற்று மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. இதனிடையே தோன்றியுள்ள புதிய அருவிகள் மலைப் பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் தோற்றமளித்து இயற்கை எழிலை மேலும் அழகூட்டி வருகிறது. மலைச்சாலையில் வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரம்மியமான இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே செல்கின்றனர்.
கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து சில தினங்களாக மழை குறைந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த இதமான தட்பவெப்பநிலையை ரசிக்க பலரும் கொடைக்கானலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. கடைசியாக ஏரியில் படகு சவாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
இதனால் சுற்றுலாபயணிகள் வருகை அதிகளவில் உள்ளது. தற்போது கொடைக்கானலில் இரவு நேரங்களில் அதிக குளிர் நிலவுகிறது. பகலில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், இரவில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியசும் வெப்பநிலை உள்ளது. இரவில் வெப்பநிலை குறைவு காரணமாகவும் காற்றில் ஈரப்பதம் அதிகம் காரணமாகவும் லேசான காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.