Published : 13 Dec 2020 10:07 AM
Last Updated : 13 Dec 2020 10:07 AM

107.8 பேரிடரில் பேருதவி: கனமழையில் களப்பணியாற்றிய கடலூர் சமுதாய பண்பலை வானொலி

கடந்த சில நாட்களில் பெருமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது நம் கடலூர் மாவட்டம். இந்த தருணத்தில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் கால சமுதாய வானொலி புயல், மழை பற்றி பொது மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை அளித்து சேவை யாற்றியிருக்கிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செயல் படுத்தப்படும் பேரிடர் கால சமுதாய வானொலி ‘கடலூர் பண்பலை 107.8’- ல் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல்கள் பெற்று, அறிவிப்புகள் செய்வதுடன், மழை வெள்ள காலங்களில் மக்கள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவிப்புகளை ஒலிபரப்பி வருகிறது. செய்யப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ‘நிவர்’ புயலில் முக்கிய பங்காற்றிய இந்த சமுதாய பண்பலை, அடுத்து வந்த ‘புரெவி’ புயலில் முக்கிய வானிலை தகவல்களை உடனுக்குடன் அளித்துச் சேவையாற்றியது.

இந்த வானொலி சேவையை கடலூரில் இருந்து 15 கி.மீ பகுதியில் வசிக்கும் மக்கள் கேட்கலாம். மின்சாரம் தடைபட்டு இருந்தாலும் பேட்டரி மூலம் இயங்கும் வானொலிப் பெட் டியை பயன்படுத்தியும், மொபைல் போனிலும் இந்த அலைவரிசையை கேட்கலாம். “இந்தச் சேவை ‘சரணாலயம் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ அமைப்பினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று நிலைய மேலாளர் ஜான் நெல்சன் தெரிவித்தார். இந்தப் பணியில் கடலூரைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பெயரில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

“இந்த பேரிடர் கால சமுதாய வானொலி பயனுள்ளதாக இருக்கிறது. புயல், மழை உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது” என்று கடலூர் சுற்று வட்டார மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் முதல் பேரிடர் கால சமுதாய வானொலி இது என்பது குறிப்பி டத்தக்கது. இந்த பேரிடர் கால சமுதாய வானொலி, வடகிழக்கு பருவ மழை முன் நடவடிக்கையாக 18.10.2020 அன்று மேம்படுத்தப்பட்டது.

இந்த வானொலி கடலூரில் இருந்து மேற்குப் பகுதியில் குள்ளஞ்சாவடி வரை, கிழக்கு பகுதியில் கடலில் 25 நாட்டிக்கல் வரை, வடக்கு பகுதியில் புதுச்சேரி தவளக்குப்பம் வரை, தெற்கு பகுதியில் ஆலப்பாக்கம் வரை உள்ளவர்கள் கேட்க முடியும். கடலூர் மாவட்டத்தில் பேரிடரால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் இதே போல் பேரிடர் கால சமுதாய வானொலியை தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x