பிச்சாவரம் சுற்றுலா மையம் மீண்டும் திறப்பு: படகோட்டிகள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த பிச்சாவரம் படகு குழாம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, இப்பகுதியைச் சேர்ந்த படகோட்டிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அழகிய சதுப்பு நிலக் காடுகளைக் கொண்டது சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்குள்ள பல்வகை பறவைகள், நீர் நாய், நரி உள்ளிட்டவைகளை ரசித்துக் கொண்டே மாங்குரோவ் காடுகளின் வழியே கழிமுக ஆற்றில் படகுச் சவாரி செய்வது சுகானுபவம்.

கரோனா முன் தடுப்பு நடவடிக்கையால், இந்த படகு குழாம் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது அரசின் தளர்வால், இந்த சுற்றுலா மையம் கடந்த 6-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. பெரு மழை காரணமாக தொடக்கத்தில் பெரிதாக யாரும் வராத நிலையில், கடந்த 4 நாட்களாக வெயில் வந்து, இயல்பு நிலை திரும்பியிருக்கிறது இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகளும் உள்ளூர்வாசிகளும் வரத் தொடங்கியிருக்கின்றனர். இதனால், மீண்டும் களை கட்டத் தொடங்கியிருக்கிறது பிச்சாவரம்.

இங்குள்ள படகு குழாமில் 14 மோட்டார் படகுகள், 40 துடுப்பு படகுகள் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் இயக்கப் படுகின்றன. இதற்கென தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே படகுச் சவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. 3ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலக் காடுகள், அதன் நடுவே 4 ஆயிரத்து 400 சிறுசிறு கால்வாய் திட்டுக்கள், பல்வகை மூலிகைத் தாவரங்கள், உலகெங்கிலுமிருந்து இருந்து வந்து செல்லும் 177 வகையான பறவைகள் கூட்டம் இவை அத்தனையும் தன்னகத்தே கொண்டுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் நம் கடலூர் மாவட்டத்திற்கு தனி பெருமை சேர்க்கிறது.

பெரு மழைக்குப் பின்னர், தற்போது வெயிலுடன் கூடிய இதமான சூழல் நிலவும் இந்நேரத்தில் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கடலூர் மாவட்ட மக்களும் அவசியம் சென்று வர வேண்டிய அற்புத இடம் இது. படகு சவாரியோடு சுற்றுலா வனப்பகுதியை காண தொலைநோக்கி கருவிகளுடன் கூடிய உயர்கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. ஏற்கெனவே ஓரிரு முறை சென்று வந்திருந்தாலும், கரோனாவால் கடந்த சில மாதங்களில் அடைந்து கிடக்கும் நம் மாவட்ட மக்கள் இந்த தருணத்தில், இந்த அலையாத்திக் காடுகளுக்கு சென்று ஆனந்த சவாரி செய்து வரலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in