

தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் உள்ள 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள2 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.32 லட்சம் கைப்பற்றப்பட்டது. தமிழக - கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் ரூ.48 ஆயிரம் சிக்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள காவல் மற்றும் ஆர்டிஓ சோதனைச் சாவடிகளில் விடிய விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார், பல லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து 4 காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ரூ.72 ஆயிரமும், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புதுச்சேரி எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் ரூ.30 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை திருமலையம்பாளையம் பகுதியில் ஆர்டிஓ கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சோதனைச் சாவடியில் ரூ.87ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடி, பாகலூர் சோதனை சாவடிகளில் ரூ.2.10 லட்சம் கைப்பற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மொத்தம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்துள்ளனர்.