

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர் கூறிய வாசகங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டி-சர்ட் ஆர்டர் தற்போது திருப்பூரில் குவியத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் ஸ்ரீகாந்த் கூறும்போது, “ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாகவும், வரும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அறிவிப்பு தொடர்பாக, ’இப்போ இல்லைனா எப்பவும் இல்லை’, ’மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’ என ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இந்த வாசகங்கள் ரசிகர்கள் மட்டுமின்றி, சமூக வலை தளங்களிலும் வைரலானது.
திருப்பூரில் உள்ள பல நிறுவனங்களில் ரஜினிகாந்த் உருவப்படத்துடன், மேற்குறிப்பிட்ட வாசகங்கள், ஆன்மிக அரசியல், அதிசயம், அற்புதம் என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் டி-சர்ட் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பூருக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. கட்சி அறிவிப்பு வெளியாகும்போது, ரசிகர் மன்றங்களில் இருந்து நேரடியாக அதிக அளவு ஆர்டர்கள் கிடைக்கும்” என்றார்.