

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவா் வா்த்தூர் பிரகாஷ்(65). முன்னாள் அமைச்சரான இவர், கடந்த நவ.25-ம் தேதி தனது கோலார் பண்ணை வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் மா்ம நபா்களால் கடத்திச் செல்லப்பட்டார்.
பின்னர், சில நாட்களுக்குப் பின் ரூ.48 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட அக்கும்பல், கோலார் அருகில் வா்த்தூர் பிரகாஷை விடுவித்துவிட்டு தப்பிச் சென்றது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரவிராஜ், விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் பதுங்கி இருப்பதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ரோகித் அலியாஸ் என்பவரை இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீஸார் சாத்தூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து வந்தனர்.
அங்கிருந்தபடி ரோகித் அலியாஸை, ரவிராஜிடம் செல்போனில் பேச வைத்து ரவிராஜை வரவழைத்தனர். அப்போது, தன்னை போலீஸார் பிடித்துச் செல்ல வந்துள்ளதை அறிந்த ரவிராஜ் காரில் தப்பிச் செல்ல முயன்றார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரோகித் அலியாஸும் அவருடைய காரில் ஏறினார். இருவரையும் பிடிக்க போலீஸார் வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.
இ.ரெட்டியாபட்டி அருகே ரவிராஜ் சென்ற கார் பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது, போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு ரவிராஜை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அதேநேரம், காரிலிருந்து இறங்கிய ரோகித் அலியாஸ் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தப்பிச் சென்றார். ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீஸார், காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த ரோகித் அலியாஸை கைது செய்தனர். இருவரையும் பெங்களூருக்கு அழைத்து சென்றனர்.