கால்நடைகளுக்கு எமனாகும் பாலித்தீன் பைகள்: பொதுமக்களின் அலட்சியத்தால் பாதிப்பு

கால்நடைகளுக்கு எமனாகும் பாலித்தீன் பைகள்: பொதுமக்களின் அலட்சியத்தால் பாதிப்பு
Updated on
2 min read

சுற்றுச்சூழல், நிலம், நிலத்தடி நீர், நீர் நிலைகள் உள்ளிட்ட இயற்கை மாசுபடுதல் காரணிகளில் பிரதான இடத்தை மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் வகிக்கின்றன. குறிப்பாக, பாலித்தீன் பைகள் கால்நடைகளுக்கு பெரும் தீங்கை விளைவித்து வருவது அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, கண்ட இடங்களில் அவற்றை அலட்சியமாக வீசியெறியும் பொதுமக்களே இதற்கு பொறுப்பாளியாகிறார்கள்.

பொதுமக்களால் வழிபாட்டுத் தலங்கள், வனப் பகுதிகளில் உணவுப்பொருட்களுடன் வீசியெறியப்படும் பாலித்தீன் பைகளைத் தின்றுவிட்டு, செரிமானம் ஆகாமல் பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாகி யானை, மான், குரங்கு போன்ற விலங்குகள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த பால் வியாபாரிக்குச் சொந்தமான பசு, கடந்த வாரம் கன்று ஈன்றது. அதன்பிறகும் வயிறு வீக்கம் குறையாமல் மாடு தொடர்ந்து முனகிக்கொண்டே இருந்ததால், திருச்சி பாலக்கரையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு, மாட்டுக்கு அறுவைச் செய்து, அதன் வயிற்றில் இருந்து சுமார் 60 கிலோ பாலித்தீன் பைகள் அகற்றப்பட்டன.

“அந்தப் பசு கன்று ஈன்றதே ஆச்சரியம்தான். ஏனெனில், மூச்சுக்கூட விடமுடியாத அளவுக்கு அதன் வயிற்றில் சுமார் 60 கிலோ பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன” என்றனர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் அந்தப் பசுவுக்கு சிகிச்சை அளித்த கால்நடை உதவி மருத்துவர்கள் கணேஷ்குமார், பிரசன்னகுமார்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “நகரப் பகுதியில் பெரும்பாலானோர் தங்களது ஆடு, மாடுகளை சாலைகளில் அவிழ்த்துவிட்டு விடுகின்றனர். அவை, உணவுப் பொருட்களுடன் கிடக்கும் பாலித்தீன் பைகளைத் தின்றுவிடுகின்றன. அவை செரிமானம் ஆகாமல், குறிப்பிட்ட காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட பாதிப்பு முற்றி கால்நடைகள் இறந்துவிடுகின்றன.

குறிப்பாக, உணவகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் காய்கறிகள், சாம்பார், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் வீசப்படும் பாலித்தீன் பைகளைத் தின்று, வயிறு கோளாறு முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வரும் ஆடு, மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களையோ அல்லது குப்பைகளையோ வைத்து வைத்து கண்ட இடங்களில் வீசக் கூடாது. கால்நடை உரிமையாளர்களும் அவற்றை சாலைகளில் சுற்றித் திரியவிடக் கூடாது” என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் கீதா ராணியிடம் கேட்டபோது, “மாநகரப் பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் பைகள், டீ கப்புகள், தட்டுகள் உட்பட சுமார் 1.85 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுமார் ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலட்சியமாக கண்ட இடங்களில் வீசும் பாலித்தீன் பைகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பாலித்தீன் பைகளால் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, மழைக் காலங்களில் பெரும் பிரச்சினையாகிறது.

எனவே, பொதுமக்கள் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போன உணவுப் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதில் பொதுமக்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in