கறவை மாடுகளுக்கு உகந்தவை கம்பு நேப்பியர் தீவனப் புல்: பொங்கலூர் வேளாண் விஞ்ஞானிகள் அறிவுரை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கறவை மாடுகளுக்கு உகந்த கம்பு நேப்பியர் தீவனப் புல் மாடுகளின் ஆரோக்கியத்துக்கும், சினைப் பிடிப்புக்கும், அதிக பால் உற்பத்திக்கும் அடிப்படையாக இருப்பவை பசுந்தீவனங்கள். இதில் உயிர்ச் சத்துகள், தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன. பசுந்தீவனங்கள் எளிதில் செரிக்கக்கூடியவை. உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால், கறவை மாடுகளின் ஆரோக்கியம் மேம்படும். பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியா, டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கால்நடைகளை மையப்படுத்தியே விவசாயம் நடைபெறுகிறது. அங்குள்ள கறவை மாடுகளின் பால் உற்பத்தியில் பாதியளவைக்கூட நாம் எட்டவில்லை. அங்குள்ள கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் பிரதான உணவு.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானி ந.ஆனந்தராஜா, கால்நடை மருத்துவ அறிவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் ப.சித்ரா ஆகியோர் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் சராசரியாக 2.5 லட்சம் கலப்பின கலவை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் பால் உற்பத்தி திறன் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது பசுந்தீவன பற்றாக்குறை. கறவை மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 8 முதல் 10 விழுக்காடு வரை பசுந்தீவனம் அளிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் சமச்சீரான சத்துகள் நிறைந்த பசுந்தீவனத்தை அளிப்பதன் மூலமாக பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். கம்பு நேப்பியர் கோ (பிஎன்)5 என்ற வீரிய ஒட்டுப்புல் ரகம், 2012-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் தீவன உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய கால பயிரான தீவனக் கம்பையும், பல்லாண்டு பயிரான நேப்பியர் புல்லையும் இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. மாடுகள் விரும்பி உண்ண ஏற்ற அளவில் இலைகள் மிருதுவாக உள்ளன. ஏக்கருக்கு 160 முதல் 180 டன் விளைச்சல் தரவல்லது. முதல் அறுவடை 75 முதல் 80 நாட்களிலும், அடுத்தடுத்த அறுவடைகள் 40 முதல் 45 நாட்களிலும் நடைபெறும். ஆண்டுக்கு 7 முதல் 8 அறுவடைகள் செய்யலாம். குளிரை தாங்கி வளரும் தன்மைக் கொண்டதால், ஆண்டு முழுவதும் சீரான விளைச்சலைக் கொடுக்கிறது.

திருப்பூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கம்பு நேப்பியர் கோ(பிஎன்)5 ஒட்டுப்புல் ரகம் தண்டு கரணை விற்பனைக்காக பராமரிக்கப்படுகிறது. இதன்மூலமாக, பல்வேறு விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் இதுவரை 60,000 தண்டுக் கரணைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பட விளக்கம்

கம்பு நேப்பியர் அறுவடை பணிகளை பார்வையிடும் பொங்கலூர் வேளாண் விஞ்ஞானிகள். (அடுத்த படம்) கறவை மாடுகளுக்கு உகந்த கம்பு நேப்பியர் தீவனப் புல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in