

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் வரும் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. டிச.25-ம் தேதி வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறக்கப்பட்டு ஜன.3-ம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.
பகல்பத்து உற்சவம் 2-ம் நாளான டிச.16-ம் தேதி தொடங்கி, தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, ராப்பத்து உற்சவம் 2-ம் நாளான 26-ம் தேதி தொடங்கி, தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசியான டிச.25-ம்தேதி காலை 6 மணி வரை உபயதாரர்கள் உட்பட பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் இ-பதிவு மூலம்முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது.
வரும் 22-ம் தேதி காலை 10 மணிமுதல் 24-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம். ஒரு நபருக்கு ஆதார் அட்டை அடிப்படையில் ஒரு நுழைவுச் சீட்டு என்ற முறையில் 3 ஆயிரம் நபர்களுக்கு மட்டும் இலவச முன்பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், உரிய அடையாள அட்டையுடன் வரும் பக்தர்கள்,வைகுண்ட ஏகாதசியன்று தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சிறப்பு காணிக்கை தரிசனக் கட்டணம் ரூ.100 செலுத்தி வரும் சேவார்த்திகள் பின் கோபுர வாசல் வழியாகவும், கட்டணம் இல்லாத பொதுதரிசனத்துக்கு முன் கோபுர வாசல் வழியாகவும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பின் கோபுர வாசல் வழியாக கட்டணம் இன்றி பரமபத வாசலைக் கடந்து, உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் சேவித்து முன் கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல்நலன் கருதி தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் கைகழுவும் திரவத்தால் கைகளை சுத்தம் செய்த பிறகுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே கோயிலில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டுவர அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.100 கட்டண டிக்கெட் 2 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வைகுண்ட ஏகாதசிஅன்று ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.